பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி
குறிப்பு: இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது
குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷாந்
நரபதி - பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம்
ஸ்வஸுர மமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.
பாண்டிய பட்டர் அருளிச் செய்தது
இரு விகற்ப நேரிசை வெண்பா
மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூ ரென்று.ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம்;-முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம் (*)கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.

(*)கீழ்மையிட சேறும் என்றும் பாடம்.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று,
ஈ.ண்டிய (*)சங்க மெடுத்தூத-வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்,
பாதங்கள் யாமுடைய பற்று.

(*) சங்கம் மடுத்தூத, அடுத்தூத, எடுத்தோத என்றும் பாட பேதங்கள்.
பெரியாழ்வார் திருமொழி
முதற் பத்து
1. திருப்பல்லாண்டு
காப்பு
குறள் வெண்செந்துறை
1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா!உன்
    (*)செவ்வடி செவ்விதிருக் காப்பு*#

(*) சேவடி என்றும் பாடம்.
1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி
    ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
    மங்கையும் பல்லாண்டு,
வடிவார் சோதிவ லத்துறை யும்சுட
    ராழியும் பல்லாண்டு,
படைபோர் புக்குமு ழங்கும்அப் பாஞ்ச
    சன்னியமும் பல்லாண்டே.#
2
3
வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து
    மண்ணும் மணமும்கொண்மின்,
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள்
    குபவினில் புகுதலொட்டோம்,
ஏழாட் காலும் பழப்பிலோம் நாங்கள்
    இராக்கதர் வாழ்இலங்கை,
பாழா ளாகப் படைபொரு தானுக்குப்
    பல்லாண்டு கூறுதுமே.
3
4
ஏடு நிலத்தி லிடுவதன் முன்னம்வந்
    தெங்கள் குழாம்புகுந்து,
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி
    வந்தொல்லைக் கூடுமினோ,
நாடு நகரமும் நன்கறி யநமோ
    நாராய ணயவென்று,
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து
    பல்லாண்டு கூறுமினே.
4
5
அண்டக் குலத்துக் கதிபதி யாகி
    அசுரரி ராக்கதரை,
(*)இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த
    இருடீகே சன்தனக்கு,
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழு
    தாயிரம் நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்துப்பல் லாண்டுபல்
    லாயிரத் தாண்டென்மினே.

(*) இண்டக்குலம் என்றும் பாடம்.
5
6
எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன்
    ஏழ்படி கால்தொடங்கி,
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்,திரு
    வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி
    அரியை யழித்தவனை,
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
    தாண்டென்று பாடுதுமே.
6
7
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி
    திகழ்திருச் சக்கரத்தின்,
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
    குடிகுடி யாட்செய்கின்றோம்,
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
    தோளும் பொழிகுருதி,
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப்
    பல்லாண்டு கூறுதுமே.
7
8
(*)நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
    அத்தாணிச் சேவகமும்,
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு
    காதுக்குக் குண்டலமும்,
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்தென்னை
    வெள்ளுயி ராக்கவல்ல,
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப்
    பல்லாண்டு கூறுவனே.

(*) நெய்யெடை, நெய்யடை என்றும் பாடம்.
8
9
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை
    உடுத்துக் கலந்ததுண்டு,
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன
    சூடுமித் தொண்டர்களோம்,
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு
    வோணத் திருவிழவில்,
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப்
    பல்லாண்டு கூறுதுமே.
9
10
எந்தா ளெம்பெரு மானுன்ற னக்கடி
    யோமென் றெழுத்துப்பட்ட
அந்நா ளே,அடி யோங்கள டிக்குடில்
    வீடுபெற் றுய்ந்ததுகாண்,
செந்நாள் தோற்றித் திருமது ரையுட்சிலை
    குனித்து, ஐந்தலைய,
பைந்நா கத்தலைப் பாய்ந்தவ னே!உன்னைப்
    பல்லாண்டு கூறுதுமே.
10
11
அல்வழக் கொன்றுமில் லாவணி கோட்டியர்
    கோன்,அபி மானதுங்கன்,
செல்வனைப் போலத் திருமா லே!நானும்
    உனக்குப் பழவடியேன்,
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று
    நாமம் பலபரவி,
பல்வகை யாலும் பவித்திர னே!உன்னைப்
    பல்லாண்டு கூறுவனே.#
11
12
பல்லாண் டென்று பவித்திர னைப்பர
    மேட்டியை, சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத் தூர்விட்டு
    சித்தன் விரும்பியசொல்,
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ
    நாராய ணாயவென்று,
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந்
    தேத்துவர் பல்லாண்டே.#
12

2. வண்ண மாடங்கள்
கண்ணன் திருஅவதாரச் சிறப்பு
கலி விருத்தம்
13
வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்,
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ண மெதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே.
1
14
ஓடு வார்விழு வாருகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரானெங்குற் றானென்பார்,
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று,
ஆடு வார்களு மாயிற்றாய்ப் பாடியே.
2
15
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்,
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
(*)ஆணொப் பாரிவன் நேரில்லை காண்,திரு
வோணத் தானுல காளுமென் பார்களே.

(*) ஆணொப்பான் என்றும் பாடம்.
3
16
உறியை முற்றத் துருட்டிநின் றாடுவார்,
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்,
செறிமென் கூந்த லவிழத் திளைத்து, எங்கும்
அறிவ ழிந்தன ராய்ப்பாடி யாயரே.
4
17
கொண்ட தாளுறி கோலக் கொடுமழு,
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்,
(*)விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்,
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.

(*) விண்டின் என்றும் பாடம்.
5
18
கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்,
ஐய நாவழித் தாளுக்கங் காந்திட,
வைய மேழுங்கண் டாள்பிள்ளை வாயுளே.
6
19
வாயுள் வையகங் கண்ட மடநல்லார்,
ஆயர் புத்திர னல்ல னருந்தெய்வம்,
பாய் சீடைப் பண்புடைப் பாலகன்,
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.
7
20
பத்து நாளுங் கடந்த இரண்டாநாள்,
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை,
உத்தா னஞ்செய் துகந்தன ராயரே.
8
21
கிடக்கில் தொட்டில் கிழிய வுதைத்திடும்,
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்,
ஒடுக்கிப் புல்கி லுதரத்தே பாய்ந்திடும்,
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காள்!
9
22
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்,
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை,
மின்னு நூல்விட்டு சித்தன் விரித்த,இப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.#
10

3. சீதக்கடல்
திருப்பாதாதிகேச வண்ணம்
கலித்தாழிசை
23
சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி,
கோதைக் குழலா ளசோதைக்குப் போத்தந்த,
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்,
பாதக் கமலங்கள் காணீரே,
    பவளவா யீர்வந்து காணீரே.#
1
24
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்,
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்,எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்,
ஒத்திட் டிருந்தவர் காணீரே,
    ஒண்ணுத லீர்வந்து காணீரே.
2
25
பணைத்தோ ளிளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை,
அணைத்தார வுண்டு கிடந்தஇப் பிள்ளை,
இணைக்காலில் வெள்ளித் தளைநின் றிலங்கும்,
கணைக்கா லிருந்தவா காணீரே,
    காரிகை யீர்வந்து காணீரே.
3
26
உழந்தாள் நறுநெய்யோ ரோர்தடா வுண்ண,
இழந்தா ளொரிவினா லீர்த்து,எழில் மத்தின்,
பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான்,
முழந்தா ளிருந்தவா காணீரே,
    முகிழ்முலை யீர்வந்து காணீரே.
4
27
பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு,
உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை,
மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்,
குறங்கு களைவந்து காணீரே,
    குவிமுலை யீர்வந்து காணீரே.
5
28
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை,
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்,
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்,
முத்த மிருந்தவர் காணீரே,
    முகிழ்நகை யீர்வந்து காணீரே.
6
29
இருங்கை மதகளி றீர்க்கின் றவனை,
பருங்கிப் பறித்துக்கொண் டோடும் பரமன்றன்,
நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்,
மருங்கு மிருந்தவா காணீரே,
    வாணுத லீர்வந்து காணீரே.
7
30
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து,
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்,
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி யிருந்தவா காணீரே,
    ஒளியிழை யீர்வந்து காணீரே.
8
31
அதிருங் கடல்நிற வண்ணனை, ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து,
பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த,
உதர மிருந்தவா காணீரே,
    ஒளிவளை யீர்வந்து காணீரே.
9
32
பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்து,அங்
கிருமா மருத மிறுத்தஇப் பிள்ளை,
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்,
திருமார் பிருந்தவா காணீரே,
    சேயிழை யீர்வந்து காணீரே.
10
33
நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே,
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்,
வாள்கொள் வளையெயிற் றாருயிர் வவ்வினான்,
தோள்க ளிருந்தவா காணீரே,
    சரிகுழ லீர்வந்து காணீரே.
11
34
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை,
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய,
கைத்தலங் கள்வந்து காணீரே,
    கனங்குழை யீர்வந்து காணீரே.
12
35
வண்டமர் பூங்குழ லாய்ச்சி மகனாகக்
கொண்டு, வளர்க்கின்ற (*)கோவலக் குட்டற்கு,
அண்டமும் நாடு மடங்க விழுங்கிய,
கண்ட மிருந்தவா காணீரே,
    காரிகை யீர்வந்து காணீரே.

(*) கோவலர்குட்டற்கு என்றும் பாடம்.
13
36
எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென் றெடுத்துக்கொண்டு,
அந்தொண்டை வாயமு தாதரித்து, ஆய்ச்சியர்
தந்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்,இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே,
    சேயிழை யீர்வந்து காணீரே.
14
37
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்,
நாக்கு வழித்துநீ ராட்டுமிந் நம்பிக்கு,
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்,
மூக்கு மிருந்தவா காணீரே,
    மொய்குழ லீர்வந்து காணீரே.
15
38
விண்கொ ளமரர்கள் வேதனை தீர,முன்
மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து,
திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான்,
கண்க ளிருந்தவா காணீரே,
    கனவளை யீர்வந்து காணீரே.
16
39
பருவம் நிரம்பாமே பாரெல்லா முய்ய,
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற,
உருவு கரிய வொளிமணி வண்ணன்,
புருவ மிருந்தவா காணீரே,
    பூண்முலை யீர்வந்து காணீரே.
17
40
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்,
உண்ணுந் திறந்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு,
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை,
திண்ண மிருந்தவா காணீரே,
    சேயிழை யீர்வந்து காணீரே.
18
41
முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்,
சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக்கொண் டோடும் பரமன்றன்,
நெற்றி யிருந்தவா காணீரே,
    நேரிழை யீர்வந்து காணீரே.
19
42
அழகிய பைம்பொன்னின் கோலங்கக் கொண்டு,
கழல்கள் சதங்கை கலந்தெங்கு மார்ப்ப,
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்,
குழல்க ளிருந்தவா காணீரே,
    குவிமுலை யீர்வந்து காணீரே.
20
தரவு கொச்சகக் கலிப்பா
43
சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன,
திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன்,
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார்போய், வைகுந்தத் தொன்றுவர் தாமே.#
21

4. மாணிக்கங்கட்டி
திருத்தாலாட்டு
கலித்தாழிசை
44
மாணிக்கங் கட்டி வயிர மிடைகட்டி,
ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்,
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்,
மாணிக் குறளனே தாலேலோ,
    வைய மளந்தானே தாலேலோ.#
1
45
உடையார் கனமணியோ டொண்மா துளம்பூ,
இடைவிரவிக் கோத்த எழில் (*)தெழ்கி னோடு,
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்,
உடையாய் அழேலழேல் தாலேலோ,
    உலக மளந்தானே தாலேலோ.

(*) தென்கு என்னும் பாடம்.
2
46
எந்தம் பிரானா ரெழில்திரு மார்வர்க்குச்,
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் றானு மெழிலுடைக் கிண்கிணி,
தந்துவ னாய்நின்றான் தாலேலோ,
    தாமரைக் கண்ணனே தாலேலோ.
3
47
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்,
அங்கைச் சரிவளையும் நாணு மரைத்தொடரும்,
அங்கண் விசும்பி லமரர்கள் போத்தந்தார்,
செங்கட் கருமுகிலே தாலேலோ,
    தேவகி சிங்கமே தாலேலோ.
4
48
எழிலார் திருமார்வுக் கேற்கு மிவையென்று,
அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு,
வழுவில் கொடையான் (*)வயிச்சி ரவணன்
தொழுதுவ னாய்நின்றான் தாலேலோ,
    தூமணி வண்ணனே தாலேலோ.

(*)வயிச்சி ராவணன் என்றும் பாடம்.
5
49
ஓதக் கடலி னொளிமுத்தி னாரமும்,
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்,
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்,
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ,
    சுந்தரத் தோளனே தாலேலோ.
6
50
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்,
வானோர் செழுஞ் சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்,
கோனே அழேலழேல் தாலேலோ,
    குடந்தைக் கிடந்தானே தாலேலோ.
7
51
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை,
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ,
அச்சுத னுக்கென் றவனியாள் போத்தந்தாள்,
நச்சு முலையுண்டாய் தாலேலோ,
    நாராய ணஅழேல் தாலேலோ.
8
52
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்,
செய்ய தடங்கண்ணுக் கஞ்சனமும் சிந்துரமும்,
வெய்ய கலைப்பாகி கொண்டுவ ளாய்சின்றாள்,
ஐயா அழேலழேல் தாலேலோ,
    அரங்கத் தணையானே தாலேலோ.
9
தரவு கொச்சகக் கலிப்பா
53
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட,
அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல்,
எஞ்சாமை வல்லவர்க் கில்லை யிடர்தானே.#
10

5. தன்முகத்து
அம்புலிப் பருவம்
கலிநிலைத்துறை
54
தன்முகத் துச்சுட்டி தூங்கத்
    தூங்கத் தவழ்ந்துபோய்,
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப்
    புழுதி யளைகின்றான்,
என்மகன் கோவிந்தன் கூத்தி
    னைஇள மாமதீ,
நின்முகம் கண்ணுள வாகில்
    நீயிங்கே நோக்கிப்போ.#
1
55
என்சிறுக் குட்ட னெனக்கோர்
    இன்னமு தெம்பிரான்,
தன்சிறுக் கைகளால் காட்டிக்
    காட்டி யழைக்கின்றான்,
அஞசன வண்ணனோ டாடல்
    ஆட வுறுதியேல்,
மஞ்சில் மறையாதே மாமதீ*
    மகிழ்ந் தோடிவா.
2
56
சுற்று மொளிவட்டம் சூழ்ந்து
    சோதி பரந்தெங்கும்,
எத்தனை செய்யிலும் என்ம
    கன்முகம் நேரொவ்வாய்,
வித்தகன் வேங்கட வாணன்
    உன்னை விளிக்கின்ற,
கைத்தலம் நோவாமே அம்பு
    லீ*கடி தோடிவா.
3
57
சக்கரக் கையன் தடங்கண்ணால்
    மலர விழித்து,
ஒக்கலை மேலிருந் துன்னையே
    சுட்டிக் காட்டுங்காண்,
தக்க தறிதியேல் சந்தி
    ரா*சலம் செய்யாதே,
மக்கள் பெறாத மலட
    னல்லையேல் வாகண்டாய்.
4
58
அழகிய வாயில் அமுத
    வூறல் தெளிவுறா,
மழலை முற்றாத இளஞ்சொல்லா
    லுன்னைக் கூவுகின்றான்,
குழகன் சிரீதரன் கூவக்
    கூசநீ போதியேல்,
புழையில வாகா தேநின்
    செவிபுகர் மாமதீ*
5
59
தண்டொடு சக்கரம் சார்ங்க
    மேந்தும் தடக்கையன்,
கண்துயில் கொள்ளக் கருதிக்
    கொட்டாவி கொள்கின்றான்,
உண்ட முலைப்பா லறாகண்
    டாய்உறங் காவிடில்,
விண்டனில் மன்னிய மாம
    தீ*விரைந் தோடிவா.
6
60
பாலக னென்று பரிபவஞ்
    செய்யேல், பண்டொருநாள்
ஆலி னிலைவ ளர்ந்த
    சிறுக்க னவன்இவன்,
மேலெழப் பாய்ந்து பிடித்துக்
    கொள்ளும் வெகுளுமேல்,
மாலை மதியாதே மாம
    தீ*மகிழ்ந் தோடிவா.
7
61
சிறியனென் றென்னிளஞ் சிங்கத்தை
    இகழேல் கண்டாய்,
சிறுமையின் வார்த்தையை மாவலி
    யினிடைச் சென்றுகேள்,
சிறுமைப் பிழைகொள்ளில் நீயுமுன்
    தேவைக் குரியைகாண்,
நிறைம தீ*நெடு மால்விரைந்
    துன்னைக் கூவுகின்றான்.
8
62
தாழியில் வெண்ணெய் தடங்கை
    யார விழுங்கிய,
பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்
    உன்னைக் கூவுகின்றான்,
ஆழிகொண் டுன்னை யெறியும்
    ஐயுற வில்லைகாண்,
வாழ வுறுதியேல் மாம
    தீ*மகிழ்ந் தோடிவா.
9
63
மைத்தடங் கண்ணி யசோதை
    தன்மக னுக்கு,இவை
ஒத்தன சொல்லி யுரைத்த
    மாற்றம், ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டு சித்தன்
    விரித்த தமிழிவை,
எத்தனை யும்சொல்ல வல்ல
    வர்க்கிட ரில்லையே.#
10

6. உய்யவுலகு
செங்கீரைப் பருவம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
64
உய்ய வுலகுபடைத் துண்ட மணிவயிறா*
    ஊழிதோ றூழிபல ஆலி னிலையதன்மேல்,
பைய வுயோகுதுயில் கொண்ட பரம்பரனே*
    பங்கய நீணயனத் தஞ்சன மேனியனே,
செய்யவள் நின்னகலம் சேமமெ னக்கருதிச்
    செல்வுபொ லிமகரக் காது திகழ்ந்திலக,
ஐயவெ னக்கொருகா லாடுக செங்கீரை,
    ஆயர்கள் போரேறே* ஆடுக ஆடுகவே.#
1
65
கோளரி யின்னுருவங் கொண்டவு ணனுடலம்
    குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய்*
மீளவ வன்மகனை மெய்ம்மை கொளக்கருதி,
    மேலை யமரர்பதி மிக்குவெ குண்டுவர,
காளநன் மேகமவை (*)கல்லொடு கால்பொழியக்
    கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே*
ஆளவெ னக்கொருகா லாடுக செங்கீரை,
    ஆயர்கள் போரேறே* ஆடுக ஆடுகவே.

(*) கல்லொடு கார் என்றும் பாடம்.
2
66
நம்முடை நாயகனே* நான்மறை யின்பொருளே*
    நாவியுள் நற்கமல நான்முக னுக்கு,ஒருகால்
தம்மனை யானவனே* தரணி தலமுழுதும்
    தாரகை யின்னுலகுந் தடவி யதன்புறமும்,
விம்மவ ளர்ந்தவனே* வேழமு மேழ்விடையும்
    (*)விரவிய வேலைதனுள் வென்றுவ ருமவனே,
அம்மவெ னக்கொருகா லாடுக செங்கீரை,
    ஆயர்கள் போரேறே* ஆடுக ஆடுகவே.

(*) விரவிய வெல்வை என்றும் பாடம்.
3
67
வானவர் தாம்மகிழ வன்சக டம்முருள
    வஞ்ச முலைப்பேயின் (*)நஞ்சம துண்டவனே,
கானக வல்விளவின் காயுதி ரக்கருதிக்
    கன்றது கொண்டெறியும் கருநிற வென்கன்றே,
தேனுக னும்முரனும் திண்டிரல் வெந்நரகன்
    என்பவர் தாம்மடியச் செருவதி ரச்செல்லும்,
ஆனை*எ னக்கொருகா லாடுக செங்கீரை,
    ஆயர்கள் போரேறே* ஆடுக ஆடுகவே.

(*) நஞ்சமு துண்டவனே, நெஞ்சமு துண்டவனே என்றும் பாடங்கள்.
4
68
மத்தள வுந்தயிரும் வார்குழல் நன்மடவார்
    வைத்தன நெய்களவால் வாரிவி ழுங்கி,ஒருங்
கொத்தவி ணைமருத முன்னிய வந்தவரை
    ஊருக ரத்தினொடும் உந்திய வெந்திறலோய்*
முத்தினி ளமுறுவல் முற்றவ ருவதன்முன்
    முன்னமு கத்தணியார் மொய்குழல் களலைய,
அத்த*எ னக்கொருகா லாடுக செங்கீரை,
    ஆயர்கள் போரேறே* ஆடுக ஆடுகவே.
5
69
காயம லர்நிறவா* கருமுகில் போலுருவா*
    கானக மாமடுவில் காளிய னுச்சியிலே,
தூயந டம்பயிலும் சுந்தர வென்சிறுவா*
    துங்கம தக்கரியின் கொம்புப றித்தவனே,
ஆயம றிந்துபொரு வானெதிர் வந்தமல்லை
    அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்*
ஆய*எ னக்கொருகா லாடுக செங்கீரை,
    ஆயர்கள் போரேறே* ஆடுக ஆடுகவே.
6
70
துப்புடை யாயர்கள்தம் சொல்வழு வாதொருகால்
    தூயக ருங்குழல்நல் தோகைம யிலனைய,
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய
    நல்லதி றலுடைய நாதனு மானவனே,
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
    தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய,என்
அப்ப*எ னக்கொருகா லாடுக செங்கீரை,
    ஆயர்கள் போரேறே* ஆடுக ஆடுகவே.
7
71
உன்னையு மொக்கலையிற் கொண்டுத மில்மருவி
    உன்னொடு தங்கள்கருத் தாயின செய்துவரும்,
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக்
    கற்றவர் தெற்றிவரப் பெற்றவெ னக்கருளி,
மன்னுகு றுங்குடியாய்* வெள்ளறை யாய்*மதில்சூழ்
    சோலைம லைக்கரசே* கண்ணபு ரத்தமுதே,
என்னவ லம்களைவாய்* ஆடுக செங்கீரை,
    ஏழுல கும்முடையாய்* ஆடுக ஆடுகவே.#
8
72
பாலொடு நெய்தயிரொண் சாந்தொடு சண்பகமும்
    பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர,
கோலந றும்பவளச் செந்துவர் வாயினிடைக்
    கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக
நீலநி றத்தழகா ரைம்படை யின்நடுவே
    நின்கனி வாயமுத மிற்றுமு றிந்துவிழ,
ஏலும றைப்பொருளே ஆடுக செங்கீரை,
    ஏழுல கும்முடையாய்* ஆடுக ஆடுகவே.
9
73
செங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில்
    சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும்,அரையில்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்
    பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும்,
மங்கல வைம்படையும் தோள்வளை யும்குழையும்
    மகரமும் வாளிகளும் சுட்டியு மொத்திலக,
எங்கள் குடிக்கரசே* ஆடுக செங்கீரை,
    ஏழுல கும்முடையாய்* ஆடுக ஆடுகவே.
10
74
அன்னமும் மீனுருவு மாளரி யும்குறளும்
    ஆமையு மானவனே* ஆயர்கள் நாயகனே*
என்அவ லம்களைவாய்* ஆடுக செங்கீரை,
    ஏழுல கும்முடையாய்* ஆடுக ஆடுக என்று
அன்னந டைமடவா ளசோதை யுகந்தபரிசு
    ஆனபு கழ்ப்புதுவைப் பட்டனு ரைத்ததமிழ்,
இன்னிசை மாலைகளிப் பத்தும்வல் லார்உலகில்
    எண்டிசை யும்புகழ்மிக் கின்பம் தெய்துவரே.#
11

7. மாணிக்கக்கிண்கிணி
சப்பாணிப் பருவம்
கலித்தாழிசை
75
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்,
ஆணிப்பொன் னாற்செய்த ஆய்கொன்னு டைமணி,
பேணிப் பவளவாய் முத்திலங் கப்,பண்டு
காணிகொண்ட கைகளால் சப்பாணி
    கருங்குழற் குட்டனே* சப்பாணி.#
1
76
பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கினி,
தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட,
என்னரை மேல் நின்றிழிந்துங்க ளாயர்தம்,
மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி
    மாயவ னே*கொட்டாய் சப்பாணி.
2
77
பன்மணி முத்தின் பவளம் பதித்தன்ன,
என்மணி வண்ணன் இலங்குபொற்றோட்டின்மேல்,
நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன்,
அம்மணி மேற்கொட்டாய் சப்பாணி
    ஆழியங் கையனே* சப்பாணி.
3
78
தூநிலா முற்றத்தே போந்து விளையாட,
வானிலா வம்புலீ சந்திரா வாவென்று,
நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம்,
கோநிலா வக்கொட்டாய் சப்பாணி
    குடந்தைக் கிடந்தானே* சப்பாணி.
4
79
புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து,
அட்டி யமுக்கி யகம்புக் கறியாமே,
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயுமுண்,
பட்டிக்கன் றே*கொட்டாய் சப்பாணி
    பற்பநா பா*கொட்டாய் சப்பாணி.
5
80
தாரித்து நூற்றுவர் தந்தைசொற் கொள்ளாது
போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாள,
பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்கு,அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி
    தேவகி சிங்கமே* சப்பாணி.
6
81
பரந்திட்டு நின்ற படுகடல்ட, தன்னை
இரந்திட்ட கைம்மே லெறிதிரை மோத,
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க,
சரந்தொட்ட கைகளால் சப்பாணி
    சார்ங்கவிற் கையனே* சப்பாணி.
7
82
குரக்கினத் தாலே குரைகடல் தன்னை,
நெருக்கி யணைகட்டி நீணீ ரிலங்கை
அரக்க ரவிய அடுகணை யாலே,
நெருக்கிய கைகளால் சப்பாணி
    நேமியங் கையனே* சப்பாணி.
8
83
அளந்திட்ட தூணை யவன்தட்ட, ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்,
உளந்தொட் டிரணிய னொண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
    பேய்முலை யுண்டானே* சப்பாணி.
9
84
அடைந்திட் டமரர்கள் ஆழ்கடல் தன்னை,
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி,
வடம்சுற்றி வாசுகி வன்கயி றாக,
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
    கார்முகில் வண்ணனே சப்பாணி.
10
தரவு கொச்சகக் கலிப்பா
85
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை,
நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத் தூர்ப்பட்டன்,
(*)வேட்கையாற் சொன்ன சப்பாணி யீரைந்தும்,
வேட்கையி னால்சொல்லு வார்வினை போமே.#

(*) வேட்கையினால் என்றும் பாடம்.
11

8. தொடர்சங்கிலிகை
தளர் நடைப் பருவம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
86
தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத்
    தூங்குபொன் மணியொலிப்ப,
படுமும் மதப்புனல் சோர வாரணம்
    பையநின் றூர்வதுபோல்,
உடன்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப
    உடைமணி பறைகறங்க,
தடந்தா ளிணைகொண்டு சார்ங்க பாணி
    தளர்நடை நடவானோ.#
1
87
செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும்
    சிறுபிறை முளை போல,
நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே
    நளிர்வெண்பல் முளையிலக,
அக்கு வடமுடுத் தாமைத் தாலிபூண்ட
    அனந்த சயனன்,
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்
    தளர்நடை நடவானோ.
2
88
மின்னுக் கொடியுமோர் வெண்திங் களும்சூழ்
    பரிவே டமுமாய்,
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச்
    சிற்றாடை யோடும்,
மின்னல் பொலிந்த தோர்கார் முகில்போலக்
    கழுத்தினிற் காறையொடும்,
தன்னில் பொலிந்த இருடீ கேசன்
    தளர்நடை நடவானோ.
3
89
கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக்
    கணகண சிரித்துவந்து,
முன்வந்து நின்று முத்தந் தருமென்
    முகில்வண்ணன் திருமார்வன்,
தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம்தந்
    தென்னைத் தளிர்ப்பிக்கின்றான்,
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே
    தளர்நடை நடவானோ.
4
90
முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்
    மொடுமொடு விரைந்தோட,
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன்
    பெயர்ந்தடி யிடுவதுபோல்,
பன்னி யுலகம் பரவியோ வாப்புகழ்ப்
    பலதேவ னென்னும்,
தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான்
    தளர்நடை நடவானோ.
5
91
ஒருகா லிற்சங் கொருகாலிற் சக்கரம்
    உள்ளடி பொறித்தமைந்த,
இருகா லுங்கொண் டங்கங் கெழுதினாற்போல்
    இலச்சினை படநடந்து,
பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல்
    பின்னையும் பெய்துபெய்து,
கருகார்க் கடல்வண்ணன் காமர் தாதை
    தளர்நடை நடவானோ.
6
92
படர்பங் கயமலர் வாய்நெகி ழப்பனி
    படுசிறு துளிபோல,
இடங்கொண்ட வெவ்வா யூறி யூறி
    யிற்றிற்று வீழநின்று,
கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போலு
    டைமணி கணகணென,
தடந்தா ளிணைகொண்டு சார்ங்க பாணி
    தளர்நடை நடவானோ.
7
93
பக்கங் கருஞ்சிறுப் பாறை மீதே
    அருவிகள் பகர்ந்தனைய,
அக்கு வடமிழிந் தேறித்த தாழ
    அணியல்குல் பிடையெர,
மக்க ளுலகினில் பெய்தறி யாத
    மணிக்குழ வியுருவின்,
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்
    தளர்நடை நடவானோ.
8
94
வெண்புழுதி மேற்பெய்து கொண்ட ளைந்ததோர்
    வேழத்தின் கருங்கன்றுபோல்,
தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன்
    சிறுபுகர் படவியர்த்து,
ஒண்போ தலர்கம லச்சிறுக் காலுறைத்
    தொன்றும் நோவாமே,
தண்போது கொண்ட தவிசின் மீதே
    தளர்நடை நடவானோ.
9
95
திரைநீர்ச் சந்திர மண்ட லம்போல்
    செங்கண்மால் கேசவன்.தன்
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி
    திகழ்ந்தெங்கும் புடைபெயர,
பெருநீர்த் திரையெழு கங்கை யிலும்பெ
    ரியதோர் தீர்த்தபலம்
தருநீர், சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்
    தளர்நடை நடவானோ.
10
96
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
    அஞ்சன வண்ணன்றன்னை,
தாயர் மகிழ வொன்னார் தளரத்
    தளர்நடை நடந்ததனை,
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால்
    விரித்தன வுரைக்கவல்லார்
மாயன் மணிவண் ணன்தாள் பணியும்
    மக்களைப் பெறுவர்களே.#
11

9. பொன்னியற்கிண்கிணி
அச்சோப் பருவம்
கலித்தாழிசை
97
பொன்னியற் கிண்கிணி சுட்டி புறங்கட்டி,
தன்னிய லோசை சலன்சல னென்றிட,
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்,
என்னிடைக் கோட்டரா அச்சோ அச்சோ
    எம்பெரு மான்வாரா யச்சோ அச்சோ.#
1
98
செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்,
பங்கிகள் வந்துன் பவளவாய் மொய்ப்ப,
சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய,
அங்கைக ளாலேவந் தச்சோ அச்சோ
    (*)ஆரத் தழுவாய்வந் தச்சோ அச்சோ.

(*) ஆரத்தழுவா என்றும் பாடம்.
2
99
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து,
நஞ்மிழ் நாகங் கிடந்தவந் பொய்கைபுக்கு,
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த
அஞ்சன வண்ணனே* அச்சோ அச்சோ
    ஆயர் பெருமானே* அச்சோ அச்சோ.
3
100
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன,
தேறி யவளும் திருவுடம் பில்பூச,
ஊறிய கூனினை உள்ளே யெடுங்க,அன்
றோ வுருவினா யச்சோ அச்சோ
    எம்பெரு மான்*வாரா யச்சோ அச்சோ.
4
101
கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி,
எழலுற்று மீண்டே இருந்துன்னை நோக்கும்,
சுழலைப் பெரிதுடைத் துச்சோ தன்னை,
அழல விழித்தானே* அச்சோ அச்சோ
    ஆழியங் கையனே* அச்சோ அச்சோ.
5
102
போரொக்கப் பண்ணிஇப் பூமிப் பொறைதீர்ப்பான்,
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்,
காரொக்கு மேனிக் கரும்பெருங் கண்ணனே,
ஆரத் தழுவாய்வந் தச்சோ அச்சோ
    ஆயர்கள் போரேறே* அச்சோ அச்சோ.
6
103
மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்,
தக்கதி தன்றென்று தானம் விலக்கிய,
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய,
சக்கரக் கையனே* அச்சோ அச்சோ
    சங்க மிடத்தானே* அச்சோ அச்சோ.
7
104
என்னிது மாயம்என் னப்ப னறிந்திலன்,
முன்னைய வண்ணமே கொண்டள வாயென்ன,
மன்னு நமுசியை வானிற் சுழற்றிய,
மின்னு முடியனே* அச்சோ அச்சோ
    வேங்கட வாணனே* அச்சோ அச்சோ.
8
105
கண்ட கடலும் மலையு முலகேழும்,
(*)முண்டத்துக் காற்றா முகில்வண்ணா ஓஎன்று,
இண்டைச் சடைமுடி யீச னிரக்கொள்ள,
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ
    மார்வில் மறுவனே* அச்சோ அச்சோ.

(*) உண்டத்துக்காற்றா என்பதும் பாடம்.
9
106
துன்னிய பேரிருள் சூழ்ந்துல கைமூட,
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட,
பின்னிவ் வுலகினில் பேரிருள் நிங்க,அன்
றன்னம தானானே அச்சோ அச்சோ
    அருமறை தந்தானே* அச்சோ அச்சோ.
10
தரவு கொச்சகக் கலிப்பா
107
நச்சுவார் முன்னிற்கும் நாரா யணன்றன்னை,
அச்சோ வருகவென் றாய்ச்சி யுரைத்தன,
மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்,
நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.#
11

10. வட்டு நடுவே
புறம் புல்கல்
வெண்டலையால் வந்த கலித்தாழிசை
108
வட்டு நடுவே வளர்கின்ற, மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்,
சொட்டுச்சொட் டென்னத் துளிக்கத் துளிக்க,என்
குட்டன்வந் தென்னைப் புறம்புல்குவான்
    கோவிந்த னென்னைப் புறம்புல்குவான்.#
1
109
(*)கிங்கிணி கட்டிக் கிறிகட்டிக் கையினில்,
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி,
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து,
என்கண்ண னென்னைப் புறம்புல்குவான்
    எம்பிரா னென்னைப் புறம்புல்குவான்.

(*) கிண்கிணி என்றும் பாடம்.
2
110
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்,
ஒத்துப் பொருந்திக்காண் டுண்ணாது மண்ணாள்வான்,
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய,
அத்தன்வந் னென்னைப் புறம்புல்குவான்
    ஆயர்க ளேறென் புறம்புல்குவான்.
3
111
நாந்தக மேந்திய நம்பி சரணென்று,
தாழ்ந்த தனஞ்செயற் காகி, தரணியில்
வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்
ஊர்ந்தவ னென்னைப் புறம்புல்குவான்
    உம்பர்கோ னென்னைப் புறம்புல்குவான்.
4
112
வெண்கலப் பாத்திரங் கட்டி விளையாடி,
கண்பல(*) செய்த தருந்தழைக் காவின்கீழ்,
பண்பல பாடிப் பண்லாண் டிசைபப், பண்டு
மண்பல கொண்டான் புறம்புல்குவான்
    வாமன னென்னைப் புறம்புல்குவான்.

(*) செய்து, பெய்து, பெய்த என்றும் பாட பேதங்கள்.
5
113
சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்,
உத்தர வேதியில் நின்ற வொருவனைக்,
கத்திரியர் காணக் காணிமுற் றுங்கொண்ட,
பத்திரா காரன் புறம்புல்குவான்
    பாரளந் தானென் புறம்புல்குவான்.
6
114
பொத்த வுரலைக் கவிழ்த்ததன் மேலேறி,
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்,
மெத்தத் திருவயி றார விழுங்கிய,
அத்தன்வந் தென்னைப் புறம்புல்குவான்
    ஆழியா னென்னைப் புறம்புல்குவான்.
7
115
மூத்தவை காண முதுமணற் குன்றேறி
கூத்துவந் தாடிக் குழலா லிசைபாடி,
வாய்த்த மறையோர் வணங்க, இமையவர்
ஏத்தவந் தென்னைப் புறம்புல்குவான்
    எம்பிரா னென்னைப் புறம்புல்குவான்.
8
116
கற்பகக் காவு கருதிய காதலிக்கு,
இப்பொழு தீவனென் றிந்திரன் காவினில்,
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்,
உய்த்தவ தென்னைப் புறம்புல்குவான்
    உம்பர்கோ னென்னைப் புறம்புல்குவான்.
9
தரவு கொச்சகக் கலிப்பா
117
ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய,
வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித் தன்மகிழ்ந்து,
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்,
வாய்த்தநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.#
10
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

இரண்டாம் பத்து
1. மெச்சூது
பூச்சி காட்டி விளையாடுதல்
கலித்தாழிசை
118
மெச்சூது சங்க மிடத்தான்நல் வேயூதி,
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்,
பத்தூர் பெறாதன்று பாரதம் கைசெய்த,
அத்தூத னப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.#
1
119
மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்,
பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய, பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற.செங்கண்
அலவலைவந் தப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.
2
120
காயுநீர் புக்குக் கடம்பேறி, காளியன்
தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி,
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற,
ஆயன் வந் தப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.
3
121
இருட்டில் பிறந்துபோய் ஏழைவல் லாயர்,
மருட்டைத் தவிர்ப்பித்து வன்கஞ்சன் மாளப்
புரட்டி.தந் நாளெங்கள் பூம்பட்டுக் கொண்ட,
அரட்டன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.
4
122
சேப்பூண்ட சாடு சிதறி. திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால்,
சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க,அன்
றாப்பூண்டா னப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.
5
123
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு,
பொப்படத் தோன்றித் தொறுப்பாடி யோம்வைத்த,
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய,
அப்பன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.
6
124
தத்துக்கொண் டாள்கொலோ தானேபெற் றாள்கொலோ,
சித்த மனையாள் அசோதை யினஞ்சிங்கம்,
கொத்தார் கருங்குழல் கோபால கோளரி,
அத்தன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.
7
125
கொங்கைவன் கூனிசொற் கொண்டு, குவலயத்
துங்கக் கரியும் பரியு மிராச்சியமும்,
எங்கும் பரதற் கருளிவன் கானடை,
அங்கண்ண னப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.
8
126
பதக முதலைவாய்ப் பட்ட களிறு,
கதறிக்கை கூப்பிஎன் கண்ணாகண் ணாவென்ன,
உதவப்புள் ளூர்ந்தங் குறுதுயர் தீர்த்த,
அதகன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே* அப்பூச்சி காட்டுகின்றான்.
9
தரவு கொச்சகக் கலிப்பா
127
வல்லா ளிலங்கை மலங்கச் சரந்துரந்த,
வில்லா ளனைவிட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த வப்பூச்சிப் பாட லிவைபத்தும்
வல்லார்போய், வைகுந்தம் மன்னி யிருப்பரே.#
10

2. அரவணையாய்
கண்ணனை முலையுண்ண அழைத்தல்
கலி விருத்தம்
128
அரவணையாய்* ஆயரேறே*
    அம்மமுண்ணத் துயிலெழாயே,
இரவுமுண்ணா துறங்கிநீபோய்
    இன்றுமுச்சி கொண்டதாலோ,
வரவுங்காணேன் வயிறசைந்தாய்
    வனமுலைகள் சோர்ந்துபாய,
திருவுடைய வாய்மடுத்துத்
    திளைத்துதைத்துப் பருகிடாயே.#
1
129
வைத்தநெய்யும் காய்ந்தபாலும்
    வடிதயிரும் நறுவெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன்
    எம்பிரான்*நீ பிறந்தபின்னை,
எத்தனையும் செய்யப்பெற்றாய்
    ஏதும்செய்யேன் கதம்படாதே,
முத்தனைய முறுவல்செய்து
    மூக்குறிஞ்சி முலையுணாயே.
2
130
தந்தம்மக்க ளழுதுசென்றால்
    தாய்மாராவார் தரிக்ககில்லார்,
வந்துநின்மேல் பூசல்செய்ய
    வாழவல்ல வாசுதேவா*
உந்தையாருன் திறத்தரல்லர்
    உன்னைநானென் றுரப்பமாட்டேன்,
நந்தகோப னணிசிறுவா*
    நான்சுரந்த முலையுணாயே.
3
131
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட
    கள்ளச்சகடு கலக்கழிய,
பஞ்சியன்ன மெல்லடியால்
    பாய்ந்தபோது நொந்திடிடுமென்று,
அஞ்சினேன்கா ணமரார்கோவே*
    ஆயர்கூட்டத் தளவன்றாலோ,
கஞ்சனையுன் வஞ்சனையால்
    வலைப்படுத்தாய்* முலையுணாயே.
4
132
தீயபுந்திக் கஞ்சனுன்மேல்
    சினமுடையான் சோர்வுபார்த்து,
மயாந்தன்னால் வலைப்படுக்கில்
    வாழகில்லேன் வாசுதேவா,
தாயர்வாய்ச்சொல் கருமங்கண்டாய்
    சாற்றிச் சொன்னேன் போகவேண்டா,
ஆயர்பாடிக் கணிவிளக்கே*
    அமர்ந்துவந்தென் முலையுணாயே.
5
133
மின்னனைய நுண்ணிடையார்
    விரிகுழல்மேல் நுழைந்தவண்டு,
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
    இனிதமர்ந்தாய்* உன்னைக்கண்டார்,
என்னநோன்பு நோற்றாள்கொலோ
    இவனைப்பெற்ற வயிறுடையாள்,
என்னும்வார்த்தை யெய்துவித்த
    இருடீகேசா* முலையுணாயே.
6
134
பெண்டிர்வாழ்வார் நின்னொப்பாலைப்
    பெறுதுமென்னு மாசையாலே,
கண்டவர்கள் போக்கொழிந்தார்
    கண்ணிணையால் கலக்கநோக்கி,
வண்டுலாம்பூங் குழலினாருன்
    வாயமுத முண்ணவேண்டி,
கொண்டுபோவான் வந்துநின்றார்
    கோவிந்த*நீ முலையுணாயே.
7
135
இருமலைபோ லெதிர்ந்தமல்லர்
    இருவரங்க மெரிசெய்தாய்,உன்
திருமலிந்து திகழுமார்வு
    தேக்கவந்தென் னல்குலேறி,
ஒருமுலையை வாய்மடுத்
    தொருமுலையை நெருடிக்கொண்டு,
இருமுலையும் முறைமுறையா
    ஏங்கியேங்கி யிருந்துணாயே.
8
136
அங்கமலப் போதகத்தில்
    அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்,
செங்கமல முகம்வியர்ப்பத்
    தீமைசெய்திம் முற்றத்தூடே,
அங்கமெல்லாம் புழுதியாக
    அளையவேண்டா அம்ம*விம்ம
அங்கமரர்க் கமுதளித்த
    அமரர்கோவே* முலையுணாயே.
9
137
ஓடவோடக் கிண்கிணிகள்
    ஒலிக்குமோசைப் பாணியாலே,
பாடிப்பாடி வருகின்றாயைப்
    பற்பநாப னென்றிருந்தேன்,
ஆடியாடி யசைந்தசைந்திட்
    டதனுக்கேற்ற கூத்தையாடி,
ஓடியோடிப் போய்விடாதே
    உத்தமாநீ முலையுணாயே.
10
138
வாரணிந்த கொங்கையாய்ச்சி
    மாதவாஉண் ணென்றமாற்றம்
நீரணிந்த குவளைவாசம்
    நிகழநாறும் வில்லிபுத்தூர்,
பாரணிந்த தொல்புகழான்
    பட்டர்பிரான் பாடல்வல்லார்,
சீரணிந்த செங்கண்மால்மேல்
    சென்றசிந்தை பெறுவர்தாமே.#
11

3. போய்ப்பாடு
பன்னிரு நாமங்கள் : காது குத்தல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
139
போய்ப்பா டுடையநின் தந்தையும் தாழ்த்தான்
    பொருதிறல் கஞ்சன் கடியன்,
காப்பாரு மில்லை கடல்வண்ணா* உன்னைத்
    தனியேபோ யெங்கும் திரிதி,
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே* கேசவ
    நம்பீ*உன் னைக்காது குத்த,
ஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார்
    அடைக்காய் திருத்திநான் வைத்தேன்.#
1
140
வண்ணப் பவள மருங்கினிற் சாத்தி
    மலர்ப்பாதக் கிண்கிணி யார்ப்ப,
நண்ணித் தொழுவர் சிந்தை பிரியாத
    நாராய ணா*இங்கே வாராய்,
எண்ணற் கரிய பிரானே* திரியை
    எரியாமே காதுக் கிடுவன்,
கண்ணுக்கு நன்று மழகு முடைய
    கனகக் கடிப்பு மிவையா.
2
141
வையமெல் லாம்பெறும் வார்கடல் வாழும்
    மகரக் குழைகொண்டு வைத்தேன்,
வெய்யவே காதில் திரியை யிடுவன்நீ
    வேண்டிய தெல்லாம் தருவன்,
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய
    ஒண்சுட ராயர்கொ ழுந்தே,
மையன்மை செய்திள வாய்ச்சிய ருள்ளத்து
    மாதவ னே*இங்கே வாராய்.
3
142
வணநன் றுடைய வயிரக் கடிப்பிட்டு
    வார்காது தாழப் பெருக்கி,
குணநன் றுடையர்இக் கோபால பிள்ளைகள்
    கோவிந்தா* நீசொல்லுக் கொள்ளாய்,
இணைநன் றழகிய இக்கடிப் பிட்டால்
    இனிய பலாப்பழம் தந்து,
சுணநன் றணிமுலை யுண்ணத் தருவன்நான்
    சோத்தம் பிரானிங்கே* வாராய்.
4
143
சோத்தம் பிரானென் றிரந்தாலும் கொள்ளாய்
    சுரிகுழ லாரொடு நீபோய்,
கோத்துக் குரவை பிணைந்திங்கு வந்தால்
    குணங்கொண் டிடுவனோ நம்பீ,
பேர்த்தும் பெரிய அப்பம் தருவன்
    பிரானே* திரியிட வொட்டில்,
வேய்ந்தடந் தோளர் விரும்பு கருங்குழல்
    விட்டுவே* நீயிங்கே வாராய்.
5
144
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டா யுன்வாயில்
    விரும்பி யதனைநான் நோக்கி,
மண்ணெல்லாம் கண்டென் மனத்துள்ளே யஞ்சி
    மதுசூத னேஎன்(*)றி ருந்தேன்,
புண்ணேது மில்லைஉன் காது மறியும்
    பொறுத்திறைப் போதிரு நம்பீ,
கண்ணானென் கார்முகி லேகடல் வண்ணா
    காவல னே*முலை யுணாயே.

(*) றறிந்தேன் என்றும் பாடம். இப்பாடம் உரைக்கும் பொருந்தும்.
6
145
முலையேதும் வேண்டேனென் றோடிநின் காதில்
    கடிப்பைப் பறித்தெறிந் திட்டு,
மலையை யெடுத்து மகிழ்ந்துகல் மாரி
    காத்துப் பசுநிரை மேய்த்தாய்,
சிலையொன் றிறுத்தாய் திரிவிக் கிரமா*
    திருவாயர் பாடிப் பிரானே,
தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே
    விட்டிட்டேன் குற்றமே யன்றே?
7
146
என்குற்ற மேயென்று சொல்லவும் வேண்டாகாண்
    என்னைநான் மண்ணுண்டே னாக,
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்
    அனைவர்க்கும் காட்டிற் றிலையே,
வன்புற் றரவின் பகைக்கொடி வாமன
    நம்பீ*உன் காதுகள் தூரும்,
துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே*
    திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.
8
147
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
    தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று,
கையைப் பிடித்துக் கரையுர லோடென்னைக்
    காணவே கட்டிற் றிலையே,
செய்தன சொல்லிச் சிரித்தங் கிருக்கில்
    சிரீதரா* உன்காது தூரும்,
கையில் திரியை யிடுகிடா யிந்நின்ற
    காரிகை யார்சிரி யாமே.
9
148
காரிகை யார்க்கு முனக்கு மிழுக்குற்றென்
    காதுகள் வீங்கி யெரியில்,
தாரியா தாகில் தலைநொந்தி டுமென்று
    விட்டிட்டேன் குற்றமே யன்றே,
சேரியில் பிள்ளைக ளெல்லாரும் காது
    பெருக்கித் திரியவும் காண்டி,
ஏர்விடை செற்றிளங் கன்றெறிந் திட்ட
    இருடீகே சா*என்றன் கண்ணே*.
10
149
கண்ணைக் குளிரக் கலந்தெங்கும்ட நோக்கிக்
    கடிகமழ் பூங்குழ லார்கள்,
எண்ணத்து ளென்று மிருந்துதித் திக்கும்
    பெருமானே* எங்க ளமுதே*
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும்
    நோவாமே காதுக் கிடுவன்,
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட
    பற்பநா பா*.ங்கே வாராய்.
11
150
வாவென்று சொல்லியென் கையைப் பிடித்து
    வலியவே காதில் கடிப்பை,
நோவத் (*)திரிக்கி லுனக்கிங் கிழுக்குற்றென்
    காதுகள் நொந்திடும் கில்லேன்,
நாவற் பழங்கொண்டு வைத்தேன் இவைகாணாய்
    நம்பீ*முன் வஞ்ச மகளை,
சாவப்பா லுண்டு டசகடிறப் பாய்ந்திட்ட
    தாமோத ரா*இங்கே வாராய்.

(*) தரிக்கில் என்றும் பாடம்.
12
151
வார்காது தாழப் பெருக்கி யமைத்து
    மகரக் குழையிட வேண்டி,
சீரா லசோதை திருமாலைச் சொன்னசொல்
    சிந்தையுள் நின்று திகழ,
பாரார் தொல்புக ழான்புது வைமன்னன்
    பன்னிரு நாமத்தாற் சொன்ன,
ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார்
    அச்சுத னுக்கடி யாரே.#
13

4. வெண்ணெயளைந்த(*)
(*) இத்திருமொழியை சந்நிதிகளிலும், இல்லங்களிலும் திருமஞ்சன காலத்தில் சேவிப்பது வழக்கம்.
நீராட்டம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
152
வெண்ணெ யளைந்த குணுங்கும்
    விளையாடு புழுதியும் கொண்டு,
திண்ணென இவ்விரா வுன்னைத்
    தேய்த்துக் கிடக்கநா னொட்டேன்,
எண்ணெய் புளிப்பழங் கொண்டிங்
    கெத்தனை போதுமி ருந்தேன்,
நண்ண லரிய பிரானே*
    நாரணா* நீராட வாராய்.#
1
153
கன்றுக ளோடச் செவியில்
    கட்டெறும் புபிடித் திட்டால்,
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய்
    திரட்டி விழுங்குமா காண்பன்,
நின்ற மராமரம் சாய்த்தாய்*
    நீபிறந் தததிரு வோணம்
இன்று,நீ நீராட வேண்டும்
    எம்பிரான்* ஓடாதே வாராய்.
2
154
பெய்ச்சி முலையுண்ணக் கண்டு
    பின்னையும் நில்லாதென் னெஞ்சம்,
ஆய்ச்சிய ரெல்லாருங் கூடி
    அழைக்கவும் நான்முலை தந்தேன்,
காய்ச்சின நீரொடு நெல்லி
    கடாரத்தில் பூரித்து வைத்தேன்,
வாய்த்த புகழ்மணி வண்ணா*
    மஞ்சன மாடநீ வாராய்.
3
155
கஞ்சன் புணர்ப்பினில் வந்த
    கடிய சகட முதைத்து,
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
    வாய்முலை வைத்த பிரானே,
மஞ்சளும் செங்கழு நீரின்
    வாசிகை யும்நாறு சாந்தும்,
அஞ்சன மும்கொண்டு வைத்தேன்
    அழகனே* நீராட வாராய்.
4
156
அப்பம் கலந்த(*)சிற் றுண்டி
    அக்காரம் பாலில் கலந்து,
சொப்பட நான்சுட்டு வைத்தேன்
    தின்ன லுறுதியேல் நம்பி*
செப்பிள மென்முலை யார்கள்
    சிறுபுறம் பேசிச் சிரிப்பர்,
சொப்பட நீராட வேண்டும்
    சோத்தம் பிரான்*இங்கே வாராய்.

(*) சிற்றுண்டை என்றும் பாடம்
5
157
எண்ணெய்க் குடத்தை யுருட்டி
    இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
    (*)கழகண்டு செய்யும் பிரானே*
உண்ணக் கனிகள் தருவன்
    ஒலிகட லோதநீர் போலே,
வண்ண மழகிய நம்பீ*
    மஞ்சன மாடநீ வாராய்.

(*)கழை கண்டு என்றும் பாடம்
6
158
கறந்தநற் பாலும் தயிரும்
    கடைந்துறி மேல்வைத்த வெண்ணெய்,
பிறந்தது வேமுத லாகப்
    பெற்றறி யேனெம்பி ரானே,
சிறந்தநற் றாயலர் தூற்றும்
    என்பத னால்பிறர் முன்னே,
மறந்து முடையாட மாட்டேன்
    மஞ்சன மாடநீ வாராய்.
7
159
கன்றினை வாலோலை கட்டிக்
    கனிக ளுதிர எறிந்து,
பின்தொடர்ந் தோடியோர் பாம்பைப்
    பிடித்துக்கொண் டாட்டினாய் போலும்,
நின்திறத் தேனல்லேன் நம்பீ*
    நீபிறந் ததிரு நன்னாள்,
நன்றுநீ நீராட வேண்டும்
    நாரணா* ஓடாதே வாராய்.
8
160
பூணித் தொழுவினில் புக்குப்
    புழுதி யளைந்தபொன் மேனி,
காணப் பெரிது முகப்பன்
    ஆகிலும் கண்டார் பழிப்பர்,
நாணெத் தனையுமி லாதாய்*
    நப்பின்னை காணில் சிரிக்கும்,
மாணிக்க மே*என் மணியே*
    மஞ்சன மாடநீ வாராய்.
9
161
கார்மலி மேனி (*)நிறத்துக்
    கண்ண பிரானை யுகந்து,
வார்மலி கொங்கை யசோதை
    மஞ்சன மாட்டிய வாற்றை,
பார்மலி தொல்புது வைக்கோன்
    பட்டர் பிரான்சொன்ன பாடல்
சீர்மலி செந்தமிழ் வல்லார்
    தீவினை யாது மிலரே.#

(*) நிறத்தன் என்றும் பாடம்.
10

5. பின்னை மணாளனை
கண்ணனின் குழலை வாரக் காக்கையை வாவெனல்
கலித்தாழிசை
162
பின்னை மணாளனைப் பேரிற் கிடந்தானை,
முன்னை யமரர் முதல்தனி வித்தினை,
என்னையு மெங்கள் குடிமுழு தாட்கொண்ட,
மன்னனை வந்துகுழல் வாராய்அக் காக்காய்*
    மாதவன் தன்குழல் வாராயக் காக்காய்*#
1
163
பேயின் முலையுண்ட பிள்ளை யிவன்முன்னம்,
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்,
காயா மலர்வண்ணன் கண்ணன் கருங்குழல்,
தூய்தாக வந்துகுழல் வாராய்அக் காக்காய்*
    தூமணி வண்ணன்குழல் வாராயக் காக்காய்*
2
164
திண்ணக் கலத்தில் திரையேறி மேல்வைத்த,
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்,
அண்ண லமரர் பெருமானை, ஆயர்தம்
கண்ணணை வந்துகுழல் வாராய்அக் காக்காய்*
    கார்முகில் வண்ணன்குழல் வாராயக் காக்காய்*
3
165
பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு,
கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு,
புள்ளிது வென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட,
பிள்ளையை வந்துகுழல் வாராய்அக் காக்காய்*
    பேய்முலை யுண்டான்குழல் வாராயக் காக்காய்*
4
166
கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினை,
பற்றி யெறிந்த பரமன் திருமுடி,
உற்றன பேசிநீ ஓடித் திரியாதே,
அற்றைக்கும் வந்துகுழல் வாராய்அக் காக்காய்*
    ஆழியான் றன்குழல் வாராயக் காக்காய்*
5
167
கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை,
அழிப்பான் நினைந்திட்டவ் வாழீ யதனால்,
விழிக்கு மளவிலே வேரறுத் தானைக்
குழற்கணி யாகக்குழல் வாராய்அக் காக்காய்*
    கோவிந்தன் றன்குழல் வாராயக் காக்காய்*
6
168
பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும்,
உண்டற்கு வேண்டிநீ யோடித் திரியாதே,
அண்டத் தமரர் பெருமான் அழகமர்,
வண்டொத் திருண்டகுழல் வாராய்அக் காக்காய்*
    மாயவன் தன்குழல் வாராயக் காக்காய்*
7
169
உந்தி யெழுந்த உருவ மலர்தன்னில்,
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்,
கொந்தக் குழலைக் குறந்து (*)புளியட்டி,
தந்தத்தின் சீப்பால்குழல் வாராய்அக் காக்காய்*
    தாமோத ரன்றன்குழல் வாராயக் காக்காய்*

(*) புழுகட்டி என்பதும் பாடம்.
8
170
மன்னன்றன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த,
முன்னிவ் வுலகினை முற்று மளந்தவன்,
பொன்னின் முடியினைப் பூவணை மேல்வைத்து,
பின்னே யிருந்துகுழல் வாராய்அக் காக்காய்*
    பேராயி ரத்தான்குழல் வாராயக் காக்காய்*
9
தரவு கொச்சகக் கலிப்பா
171
கண்டார் பழியாமே அக்காக்காய்* கார்வண்ணன்
வண்டார் குழல்வார வாவென்ற ஆய்ச்சிசொல்,
விண்தோய் மதிள்வில்லி புத்தூர்க்கோன் பட்டன்சொல்,
கொண்டாடிப் பாடக் குறுகா வினை(*)தாமே.#

(*)தானே என்றும் பாடம்.
10

6. வேலிக்கோல்
காக்கையைக் கண்ணனுக்குக் கோல் கொண்டுவர விளம்புதல்
கலித்தாழிசை
172
வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி,
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத் தில்பூண்டு,
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு,
காலிப்பின் போவாற்கோர் கோல்கொண்டுவா,
    கடல்நிற வண்ணற்கோர் கோல்கொண்டுவா.#
1
173
கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும்,
எங்கும் திரிந்து விளையாடு மென்மகன்,
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க,நல்
அங்க முடையதோர் கோல்கொண்டுவா,
    அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா.
2
174
கறுத்திட் டெதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்,
பொறுத்திட் டெதிர்வந்த புள்ளின்வாய் கீண்டான்,
நெறித்த குழல்களை நீங்கமுன் னோடி,
சிறுக்கன்று மேய்ப்பாற்கோர் கோல்கொண்டுவா,
    தேவ பிரானுக்கோர் கோல்கொண்டுவா.
3
175
ஒன்றே யுரைப்பா னொருசொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோ தனன்பக்கல்,
சென்றங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு,
கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா,
    கடல்நிற வண்ணற்கேர் கோல்கொண்டுவா.
4
176
சீரொன்று தூதாய்த் துரியோ தனன்பக்கல்,
ஊரொன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்,
பாரொன்றிப் பாரதம் கைசெய்து. பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்கோர் கோல்கொண்டுவா,
    தேவ பிரானுக்கோர் கோல்கொண்டுவா.
5
177
ஆலத் திலையா னரவி னணைமேலான்,
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்,
பாலப் பிராயத்தே பார்த்தற் கருள்செய்த,
கோலப் பிரானுக்கோர் கோல்கொண்டுவா,
    குடந்தைக் கிடந்தாற்கோர் கோல்கொண்டுவா.
6
178
பொன்திகழ் சித்திர கூடப் பொருப்பினில்,
உற்ற வடிவி லொருகண்ணம் கொண்ட, அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து,உன்னை
மற்றைக்கண் கொள்ளாமே கோல்கொண்டுவா,
    மணிவண்ண நம்பிக்கோர் கோல்கொண்டுவா.
7
179
மின்னிடைச் சீதை பொருட்டா, இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்து முடன்வீழ,
தன்னிக ரொன்றில்லாச் சிலைகால் வளைத்திட்ட,
மின்னு முடியற்கோர் கோல்கொண்டுவா,
    வேலை யடைத்தாற்கோர் கோல்கொண்டுவா.
8
180
தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணிசெய்து,
மின்னிலங்கு பூண்வி பீடண நம்பிக்கு,
என்னிலங்கு நாமத் தளவு மரசென்ற,
மின்னலங் காரற்கோர் கோல்கொண்டுவா,
    வேங்கட வாணற்கோர் கோல்கொண்டுவா.
9
தரவு கொச்சகக் கலிப்பா
181
அக்காக்காய் நம்பிக்குக் கோல்கொண்டு வாவென்று,
மிக்கா ளுரைத்தசொல் வில்லிபுத் தூர்ப்பட்டன்,
ஒக்க வுரைத்த தமிழ்பத்தும் வல்லவர்,
மக்களைப் பெற்று மகிழ்வரிவ் வையத்தே.#
10

7. ஆனிரை
(இந்தத் திருமொழி நித்தியானுஸந்தானத்திலுள்ளது)
கண்ணனைப் பூச்சூட அழைத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
182
ஆனிரை மேய்க்கநீ போதி
    அருமருந் தாவ தறியாய்,
கானக மெல்லாம் திரிந்துன்
    கரிய திருமேனி வாட,
பானையிற் பாலைப் பருகிப்

    பற்றாதா ரெல்லாம் சிரிப்ப,
தேனி லினிய பிரானே*
    செண்பகப் பூச்சூட்ட வாராய்.#
1
183
கருவுடை மேகங்கள் கண்டால்
    உன்னைக்கண் டாலொக்கும் கண்கள்,
உருவுடை யாய்*உல கேழும்
    உண்டாக வந்து பிறந்தாய்,
திருவுடை யாள்மண வாளா*
    திருவரங் கத்தே கிடந்தாய்,
மருவி மணம்கமழ் கின்ற
    மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.
2
184
மச்சொடு மாளிகை யேறி
    மாதர்கள் தம்மிடம் புக்கு,
கச்சொடு பட்டைக் கிழித்துக்
    காம்பு துகிலவை கீறி,
நிச்சலும் தீமைகள் செய்வாய்
    நீள்திரு வேங்கடத் தெந்தாய்,
பச்சைத் தமனகத் தொடு
    பாதிரிப் பூச்சூட்ட வாராய்.
3
185
தெருவின்கண் நின்றிள வாய்ச்சி
    மார்களைத் தீமைசெய் யாதே,
மருவும் தமனக மும்சீர்
    மாலை மணம்கமழ் கின்ற,
புருவம் கருங்குழல் நெற்றி
    பொலிந்த முகிற்கன்று போலே,
உருவ மழகிய நம்பீ*
    உகந்திவை சூட்டநீ வாராய்.
4
186
புள்ளினை வாய்பிளந் திட்டாய்
    பொருகரி யின்கொம் பொசித்தாய்,
கள்ள வரக்கியை மூக்கொடு
    காவல னைத்தலை கொண்டாய்,
அள்ளிநீ வெண்ணெய் விழுங்க
    அஞ்சா தடியே னடித்தேன்,
தெள்ளிய நீரி லெழுந்த
    செங்கழு நீர்சூட்ட வாராய்.
5
187
எருதுக ளோடு பொருதி
    யேதுமு லோபாய்காண் நம்பீ,
கருதிய தீமைகள் செய்து
    கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்,
தெருவின்கண் தீமைகள் செய்து
    சிக்கென மல்லர்க ளோடு,
பொருது வருகின்ற பொன்னே*
    புன்னைப்பூச் சூட்ட வாராய்.
6
188
குடங்க ளெடுத்தேற விட்டுக்
    கூத்தாட வல்லவெங் கோவே,
மடங்கொள் மதிமுகத் தாரை
    மால்செய்ய வல்லவென் மைந்தாய்,
இடந்திட் டிரணியன் நெஞ்சை
    இருபிள வாகமுன் கீண்டாய்,
குடந்தைக் கிடந்தவெங் கோவே*
    குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
7
189
சீமா லிகவன னோடு
    தோழமை கொள்ளவும் வல்லாய்,
சாமா றவனைநீ யெண்ணிச்
    சக்கரத் தால்தலை கொண்டாய்,
ஆமா றறியும் பிரானே*
    அணியரங் கத்தே கிடந்தாய்,
ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய்
    இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்.
8
190
அண்டத் தமரர்கள் சூழ
    அத்தாணி யுள்ளங்கி ருந்தாய்,
தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய்
    தூமல ராள்மண வாளா,
உண்டிட் டுலகினை யேழும்
    ஓரா (*)லிலையில்துயில் கொண்டாய்,
கண்டுநா னுன்னை யுகக்கக்
    கருமுகைப் பூச்சூட்ட வாராய்.

(*) லிலைத்துயில் என்றும் பாடம்.
9
191
செண்பக மல்லிகை யோடு
    செங்கழு நீரிரு வாட்சி,
எண்பகர் பூவும் கொணர்ந்தேன்
    இன்றிவை சூட்டவா வென்று,
மண்பகர் கொண்டானை யாய்ச்சி
    மகிழ்ந்துரை செய்தவிம் மாலை,
பண்பகர் வில்லிபுத் தூர்க்கோன்
    பட்டர் பிரான்சொன்ன பத்தே.#
10

8. இந்திரனோடு
(இந்தத் திருமொழி நித்தியானுஸந்தானத்திலுள்ளது)
கண்ணனைக் கண்ணெச்சில் படாதபடி திருவந்திக் காப்பிட அழைத்தல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
192
இந்திர னோடு பிரமன்
    ஈச னிமையவ ரெல்லாம்,
மந்திர மாமலர் கொண்டு
    மறைந்துவ ராய்வந்து நின்றார்,
சந்திரன் மாளிகை சேரும்
    சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,
அந்தியம் போதிது வாகும்
    அழகனே* காப்பிட வாராய்.#
1
193
கன்றுக ளில்லம் புகுந்து
    கதறுகின் றபசு வெல்லாம்,
நின்றொழிந் தேனுன்னைக் கூவி
    நேசமே லொன்றுமி லாதாய்,
மன்றில்நில் லேலந்திப் போது
    மதில்திரு வெள்ளறை நின்றாய்,
நன்றுகண் டாயென்றன் சொல்லு
    நானுன்னைக் காப்பிட வாராய்.
2
194
செப்போது மென்முலை யார்கள்
    சிறுசோறு மில்லும் சிதைத்திட்டு,
அப்போது நானுரப் பப்போய்
    அடிசிறு முண்டிலை யாள்வாய்,
முப்போதும் வானவ ரேத்தும்
    முனிவர்கள் வெள்ளறை நின்றாய்,
இப்போது நானொன்றும் செய்யேன்
    எம்பிரான்* காப்பிட வாராய்.
3
195
கண்ணில் மணற்கொடு தூவிக்
    காலினால் பாய்ந்தனை யென்றென்று
எண்ணரும் பிள்ளகைள் (*)வந்திட்
    டிவரால் முறைப்படு கின்றார்,
கண்ணனே* வெள்ளறை நின்றாய்*
    கண்டாரோ டேதீமை செய்வாய்,
வண்ணமே வேலைய தொப்பாய்*
    வள்ளலே* காப்பிட வாராய்.

(*) வந்திட்டிவரார் என்பதும் பாடம்.
4
196
பல்லாயி ரவ்ரிவ் வூரில்
    பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாமுன் மேலன்றிப் போகா
    தெம்பிரான் நீயிங்கே வாராய்,
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்,
    ஞானச்சு டரே*உன் மேனி,
சொல்லார வாழ்த்திநின் றேத்திச்
    சொப்படக் காப்பிட வாராய்.
5
197
கஞ்சன்க றுக்கொண்டு நின்மேல்
    கருநிறச் செம்மயிர்ப் பேயை,
வஞ்சிப்ப தற்கு விடுத்தான்
    என்பதோர் வார்த்தையு முண்டு,
மஞ்சு தவழ்மணி மாட
    மதில்திரு வெள்ளறை நின்றாய்,
அஞ்சுவன் நீயங்கு நிற்க
    அழகனே* காப்பிட வாராய்.
6
198
கள்ளச் சகடும் மருதும்
    கலக்கழி யவுதை செய்த,
பிள்ளை யரசே*நீ பேயைப்
    பிடித்து முலையுண்ட பின்னை,
உள்ளவா றொன்று மறியேன்*
    ஒளியுடை வெள்ளறை நின்றாய்,
பள்ளிகொள் போதிது வாகும்
    பரமனே காப்பிட வாராய்.
7
199
இன்ப மதனை யுயர்த்தாய்*
    இமையவர்க் கென்று மரியாய்,
கும்பக் களிறட்ட கோவே*
    கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே*
செம்பொன் மதில்வெள் ளறையாய்*
    செல்வத்தி னால்வளர் பிள்ளாய்,
கம்பக் கபாலிகா ணங்குக்
    கடிதோடிக் காப்பிட வாராய்.
8
200
இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்
    டெழில்மறை யோர்வந்து நின்றார்,
தருக்கேல்நம் பி*சந்தி நின்று
    தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்,
திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்
    தேசுடை வெள்ளறை நின்றாய்,
உருக்காட்டு மந்தி விளக்கின்
    றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்.
9
201
போதமர் செல்வக் கொழுந்து
    புணர்திரு வெள்ளறை யானை,
மாதர்க்கு யர்ந்த அசோதை
    மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்,
வேதப் பயன்கொள்ள வல்ல
    விட்டுசித் தன்சொன்ன மாலை,
பாதப் பயன்கொள்ள வல்ல
    பத்தருள் ளார்வினை போமே.#
10

9. வெண்ணெய் விழுங்கி
பாலக்கிரீடை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
202
வெண்ணெய் விழுங்கி வெறுங்க லத்தை
    வெற்பிடை யிட்டத னோசை கேட்கும்,
கண்ண பிரான்கற்ற கல்வி தன்னைக்
    காக்ககில் லோமுன் மகனைக் காவாய்,
புண்ணிற் புளிப்பெய்தா லொக்குந் தீமை
    புரைபுரை யாலிவை செய்ய வல்ல,
அண்ணற்கண் ணானோர் மகனைப் பெற்ற
    அசோதை நங்காய்*உன் மகனைக் கூவாய்.#
1
203
வருக வருக வருக இங்கே
    வாமன நம்பீ* வருக இங்கே,
கரிய குழல்செய்ய வாய்மு கத்துக்
    காகுத்த நம்பீ* வருக இங்கே,
அரிய னிவனெனக் கின்று நங்காய்*
    அஞ்சன வண்ணா* அசல கத்தார்,
பரிபவம் பேசத் தரிக்க கில்லேன்
    பாவியே னுக்கிங்கே போத ராயே.
2
204
திருவுடைப் பிள்ளைதான் தீய வாறு
    தேக்கமொன் றுமிலன் தேசு டையன்,
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய்
    (*)உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்,
அருகிருந் தார்தம் மைஅறி யாயஞ்
    செய்வது தான்வ ழக்கோ அசோதாய்*
வருகவென் றுன்மகன் தன்னைக் கூவாய்
    வாழ் வொட்டான் மதுசூ தனனே.

(*) உறிச்சி என்பதும் பாடம்.
3
205
கொண்டல்வண் ணா*இங்கே போத ராயே
    கோயிற்பிள் ளாய்*இங்கே போத ராயே,
தெண்டிரை சூழ்திருப் பேர்க்கி டந்த
    திருநார ணா*இங்கே போத ராயே,
உண்டுவந் தேனம்ம மென்று சொல்லி
    ஓடி அகம்புக ஆய்ச்சி தானும்,
கண்டேதி ரேசென்றெ டுத்துக் கொள்ளக்
    கண்ணபி ரான்கற்ற கல்வி தானே.
4
206
பாலைக் கறந்தடுப் பேற வைத்துப்
    பல்வளை யாளென் மகளி ருப்ப,
மேலைய கத்தே நெருப்பு வேண்டிச்
    சென்றிறைப் பொழுதங்கே பேசி நின்றேன்,
சாளக்கி ராம முடைய நம்பி
    சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்,
ஆலைக்க ரும்பின் மொழி யனைய
    அசோதைநங் காய்*உன் மகனைக் கூவாய்.
5
207
போதர்கண் டாயிங்கே போதர் கண்டாய்
    போதரே னென்னாதே போதர் கண்டாய்,
ஏதையும் சொல்லி அசல கத்தார்
    ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன்,
கோது கலமுடைக் குட்ட னேயோ*
    குன்றெடுத் தாய்*குட மாடு கூத்தா*
வேதப் பொருளே*என் வேங் கடவா*
    வித்தக னே*இங்கே போத ராயே.
6
208
செந்நெ லரிசி சிறுப ருப்புச்
    செய்தஅக் காரம் நறுநெய் பாலால்,
பன்னிரண் டுதிரு வோண மட்டேன்,
    பண்டு மிப்பிள் ளைபரி சறிவன்,
இன்னமு கப்பன்நா னென்று சொல்லி
    எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்,
உன்மகன் தன்னை அசோதை நங்காய்*
    கூவிக் கொள்ளா யிவையும் சிலவே.
7
209
கேசவ னே*இங்கே போத ராயே
    கில்லேனென் னாதிங்கே போத ராயே,
நேசமி லாதார் அகத்தி ருந்து
    நீவிளை யாடாதே போத ராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும்
    தொண்டரும் நின்ற விடத்தில் நின்று,
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்
    தாமோத ரா*இங்கே போத ராயே.
8
210
கன்னல் இலட்டுவத் தோடு சீடை,
    காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு,
என்னக மென்றுநான் வைத்துப் போந்தேன்
    இவன்புக் கவற்றைப் பெறுத்திப் போந்தான்,
பின்னு மகம்புக் குறியை நோக்கிப்
    பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்,
உன்மகன் தன்னை அசோதை நங்காய்*
    கூவிக் கொள்ளா யிவையும் சிலவே.
9
211
சொல்லி லரசிப் படுதி நங்காய்*
    சூழ லுடையனுன் பிள்ளை தானே,
இல்லம் புகுந்தென் மகளைக் கூவிக்
    கையில் வளையைக் கழற்றிக் கொண்டு,
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
    அங்கொருத் திக்கவ் வளைகொ டுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
    நானல் லேன்என்று சிரிக்கின் றானே.
10
212
வண்டுக ளித்திரைக் கும்பொ ழில்சூழ்
    வருபுனல் காவிரித் தென்ன ரங்கன்,
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம்
    பட்டர்பி ரான்விட்டு சித்தன் பாடல்,
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார்
    கோவிந்தன் தன்னடி யார்க ளாகி,
எண்டிசைக் கும்விளக் காகி நிற்பார்
    இணையடி யென்தலை மேல னவே.#
11

10. ஆற்றிலிருந்து
அயலகத்தார் முறையீடு
கலித்தாழிசை
213
ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை,
சேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு,
காற்றிற் கடியனாய் ஓடி யகம்புக்கு,
மாற்றமும் தாரானா லின்று முற்றும்,
    வளைத்திறம் பேசானா லின்று முற்றும்.#
1
214
குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ,
எண்டிசை யோரு மிறைஞ்சித் தொழுதேத்த,
வண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு,
விண்தோய் மரத்தானா லின்று முற்றும்,
    வேண்டவும் தாரானா லின்று முற்றும்.
2
215
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி,
விடம்படு நாகத்தை வால்பற்றி யீர்த்து,
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு,
உடம்பை அசைத்தானா லின்று முற்றும்,
    உச்சியில் நின்றானா லின்று முற்றும்.
3
216
தேனுக னாவி செகுத்து, பனங்கனி
தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால்,
வானவர் கோன்விட வந்த மழைதடுத்து,
ஆனிரை காத்தானா லின்று முற்றும்,
    அவைஉய்யக் கொண்டானா லின்று முற்றும்.
4
217
ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு,
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு,
வேய்த்தடந் தோளினார் வெண்ணெய்கொள் மாட்டாது,அங்கு
ஆப்புண் டிருந்தானா லின்று முற்றும்,
    அடியுண் டழுதானா லின்று முற்றும்.
5
218
தள்ளித் தளர்நடை யிட்டிளம் பிள்ளையாய்,
உள்ளத்தி னுள்ளே அவளை யுறநோக்கி,
கள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலையுயிர்,
துள்ளச் சுவைத்தானா லின்று முற்றும்,
    துவக்கற உண்டானா லின்று முற்றும்.
6
219
மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று,
மூவடி தாவன் றிரந்தஇம் மண்ணினை,
ஓரடி யிட்டிரண் டாமடி தன்னிலே,
தாவடி யிட்டானா லின்று முற்றும்,
    தரணி யளந்தானா லின்று முற்றும்.
7
220
தாழைதண் ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய்,
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்,
வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய்,
ஆழிபணி கொண்டானா லின்று முற்றும்,
    அதற்கருள் செய்தானா லின்று முற்றும்.
8
221
வானத் தெழுந்த மழைமுகில் போல்,எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி,
ஏனத் துருவா யிடந்தஇம் மண்ணினை,
தானத்தே வைத்தானா லின்று முற்றும்,
    தரணி யிடந்தானா லின்று முற்றும்.
9
தரவு கொச்சகக் கலிப்பா
222
அங்கம லக்கண்ணன் தன்னை அசோதைக்கு,
மங்கைநல் லார்கள்தாம் வந்து முறைப்பட்ட,
அங்கவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன்சொல்,
இங்கிவை வல்லவர்க் கேதமொன் றில்லையே.#
10
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

மூன்றாம் பத்து
1. தன்னேராயிரம்
அன்னை கண்ணனுக்கு அம்மம்தர அஞ்சுதல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
223
தன்னே ராயிரம் பிள்ளைக ளோடு
    தளர்நடை யிட்டு வருவான்,
பொன்னேய் நெய்யொடு பாலமு துண்டொரு
    புள்ளுவன் பொய்யே தவழும்,
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை
    துஞ்சவாய் வைத்த பிரானே,
அன்னே* உன்னை யறிந்துகொண் டேன்உனக்
    கஞ்சுவன் அம்மம் தரவே.#
1
224
பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப்
    போனேன் வருமள விப்பால்,
வன்பா ரச்சக டமிறச் சாடி
    வடக்கி லகம்புக் கிருந்து,
மின்போல் நுண்ணிடை யாளொரு கன்னியை
    வேற்றுரு வம்செய்து வைத்த,
அன்பா* உன்னை யறிந்துகொண் டேன்உனக்
    கஞ்சுவன் அம்மம் தரவே.
2
225
கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
    குடத்தயிர் சாய்த்துப் பருகி,
பொய்ம்மா யமரு தான அசுரரைப்
    பொன்றுவித் தின்றுநீ வந்தாய்,
இம்மா யம்வல்ல பிள்ளைநம் பீ*உன்னை
    என்மக னேயென்பர் நின்றார்,
அம்மா* உன்னை யறிந்துகொண் டேன்உனக்
    கஞ்சுவன் அம்மம் தரவே.
3
226
மையார் கண்மட வாய்ச்சியர் மக்களை
    மையன்மை செய்தவர் பின்போய்,
கொய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
    குற்றம் பலபல செய்தாய்,
பொய்யா உன்னைப் புறம்பல பேசுவ
    புத்தகத் துக்குள கேட்டேன்,
ஐயா* உன்னை யறிந்துகொண் டேன்உனக்
    கஞ்சுவன் அம்மம் தரவே.
4
227
முப்போ தும்கடைந் தீண்டிய வெண்ணெயி
    னோடு தயிரும் விழுங்கி,
கப்பா லாயர்கள் காவில் கொணர்ந்த
    கலத்தொடு சாய்த்துப் பருகி,
மெய்ப்பா லுண்டழு பிள்ளைகள் போலநீ
    விம்மிவிம் மியழு கின்ற,
அப்பா* உன்னை யறிந்துகொண் டேனுனக்
    கஞ்சுவ னம்மம் தரவே.
5
228
கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக்
    கற்றா னிரைமண்டித் தின்ன,
வீரம்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி
    வீழ எறிந்த பிரானே,
சுரும்பார் மென்குழல் கன்னி யொருத்திக்குச்
    சூழ்வலை வைத்துத் திரியும்,
அரம்பா* உன்னை யறிந்துகொண் டேனுனக்
    கஞ்சுவ னம்மம் தரவே.
6
229
மருட்டார் மென்குழல் கொண்டு பொழில்புக்கு
    வாய்வைத்தவ் வாயர்தம் பாடி,
சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்துன்னைச்
    சுற்றும் தொழநின்ற சோதி,
பொருட்டா யமிலே னெம்பெரு மான்*உன்னைப்
    பெற்றகுற் றமல்லால், மற்றிங்
கரட்டா வுன்னை யறிந்துகொண் டேனுனக்
    கஞ்சுவ னம்மம் தரவே.
7
230
வாளா வாகிலும் காணகில் லார்பிறர்
    மக்களை மையன்மை செய்து,
தோளா லிட்டவ ரோடு திளைத்துநீ
    சொல்லப் படாதன செய்தாய்,
கேளா ராயர் குலத்தவ ரிப்பழி
    கெட்டேன்* வாழ்வில்லை, நந்தன்
காளாய்* உன்னை யறிந்துகொண் டேனுனக்
    கஞ்சுவ னம்மம் தரவே.
8
231
தாய்மார் மோர்விற்கப் போவர் தகப்பன்மார்
    கற்றா னிரைப்பின் போவர்,
நீயாய்ப் பாடி யிளங்கன்னி மார்களை
    நேர்பட வேகொண்டு போதி,
காய்வார்க் கென்று முகப்பன வேசெய்து
    கண்டார் கழறத் திரியும்,
ஆயா* உன்னை யறிந்துகொண் டேனுனக்
    கஞ்சுவ னம்மம் தரவே.
9
232
தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச்
    சோலைத் தடங்கொண்டு புக்கு,
முத்தார் கொங்கை புணர்ந்திரா நாழிகை
    மூவெழு சென்றபின் வந்தாய்,
ஒத்தார்க் கொத்தன பேசுவர் உன்னை
    உரப்பவே நானொன்றும் மாட்டேன்,
அத்தா* உன்னை யறிந்துகொண் டேன்உனக்
    கஞ்சுவ னம்மம் தரவே.
10
233
காரார் மேனி நிறத்தெம்பி ரானைக்
    கடிகமழ் பூங்குழ லாய்ச்சி,
ஆரா இன்னமு துண்ணத் தருவன்நான்
    அம்மம்தா ரேனென்ற மாற்றம்,
பாரார் தொல்புக ழான்புது வைமன்னன்
    பட்டர்பி ரான்சொன்ன பாடல்
ஏரா ரின்னிசை (*)மாலைவல் லாரி
    ருடீகே சனடி யாரே.#

(*) மாலைகள் வல்லார் என்றும் கூறுவர்.
11

2. அஞ்சன வண்ணனை
கண்ணனை அன்னை கன்றின்பின் போக்கியதெண்ணி மனம் இரங்குதல்
கலிநிலைத்துறை
234
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை,
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே,
கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின்பின்,
என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.#
1
235
பற்றுமஞ் சள்பூசிப் பாவை மாலொடு பாடியில்,
சிற்றில் சிதைத்தெங்கும் தீமை செய்து திரியாமே,
கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன்றின்பின்,
எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
2
236
நன்மணி மேகலை நங்கை மாரொடு நாடொறும்,
பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே,
கன்மணி நின்றதிர் கான தரிடைக் கன்றின்பின்,
என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே.
3
237
வண்ணக் கருங்குழல் மாதர் வந்தலர் தூற்றிட,
பண்ணிப் பலசெய்திப் பாடி யெங்குந் திரியாமே,
கண்ணுக் கினியானைகட் கான தரிடைக் கன்றின்பின்,
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே.
4
238
அவ்வவ் விடம்புக் கவ்வாயர் பெண்டிர்க் கணுக்கனாய்,
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே,
எவ்வும் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின்பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
5
239
மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்,
படிறு பலசெய்திப் பாடி யெங்கும் திரியாமே,
கடிறு பலதிரி கான தரிடைக் கன்றின்பின்,
இடறவென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
6
240
வள்ளி நுடங்கிடை மாதர் வந்தலர் தூற்றிட,
துள்ளி விளையாடித் தேழ ரோடு திரியாமே,
கள்ளி யுணங்கு வெங்கா னதரிடைக் கன்றின்பின்,
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
7
241
பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டஅப் பாங்கினால்,
என்னிளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்துயான்,
பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின்பின்,
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே.
8
242
குடையும் செருப்பும் கொடாதே தாமே தரனை*நான்,
உடையும் கடியன ஊன்று வெம்பரற் களுடை,
கடியவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்,
கொடியேனென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
9
243
என்று மெனக்கினி யானை என்மணி வண்ணனை,
கன்றின் பின்போக்கி னேனென் றசோதை கழறிய,
பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன்சொல்,
இன்தமிழ் மாலை வல்ல வர்க்கிட ரில்லையே.#
10

3. சீலைக்குதம்பை
கண்ணன் கன்றுகள் மேய்த்து வருவது கண்டு அன்னை மகிழ்தல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
244
சீலைக் குதம்பை ஒருகா தொருகாது
    செந்நிற மேல்தொன் றிப்பூ,
கோலப் பணைக்கச்சும் கூறை யுடையும்
    குளிர்முத் தின்(*)கோ டாலமும்,
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்
    வேடத்தை வந்து காணீர்,
(**)ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்*
    நானேமற் றொரு மில்லை.#

(*) கோடாரமும் என்றும் பாடம்.
(**) ஞாலத்தில் என்றும் பாடம்.
1
245
கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில்
    காவிரித் தென்ன ரங்கம்,
மன்னிய சீர்மது சூதனா* கேசவா*
    பாவியேன் வாழ்வு கந்து,
உன்னை யிளங்கன்று மேய்க்கச் சிறுகாலே
    ஊட்டி யொருப்ப டுத்தேன்,
என்னில் மனம்வலி யாளொரு பெண்ணில்லை
    என்குட்ட னே*முத் தம்தா.
2
246
(*)காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து
    மறியோடி. கார்க்கோ டல்பூச்
சூடி வருகின்ற தாமோ தரா*கற்றுத்
    தூளிகா ணுன்னு டம்பு,
பேடை மயிற்சாயல் பின்னை மணாளா*
    நீராட் டமைத்து வைத்தேன்,
ஆடி யமுதுசெய் அப்பனு முண்டிலன்
    உன்னோ டுடனே யுண்பான்.

(*) திருமஞ்சன காலத்தில் சேவிக்கப்படுவது இப்பாசுரம்.
3
247
கடியார் பொழிலணி வேங்கட வா*கரும்
    போரே றே*நீ யுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்
    கொள்ளாதே போனாய் மாலே,
கடியவெங் கானிடைக் கன்றின்பின் போன
    சிறுக்குட் டச்செங் கமல
அடியும் பெதும்பி,உன் கண்கள் சிவந்தாய்
    அசைந்திட் டாய்நீ யெம்பிரான்*
4
248
பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை
    வாய்வைத்த போரே றே*என்
சிற்றாயர் சிங்கமே* சீதைம ணாளா*
    சிறுக்குட்டச் செங்கண் மாலே,
சிற்றாடை யும்சிறுப் பத்திர முமிவை
    கட்டிலின் மேல்வைத் துப்போய்,
கற்றாய ரோடுநீ கன்று மேய்த்துக்
    கலந்துடன் வந்தாய் போலும்*
5
249
அஞ்சுட ராழியுன் கையகத் தேந்தும்
    அழகா*நீ பொய்கை புக்கு,
நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும்
    நானுயிர் வாழ்ந்தி ருந்தேன்,
என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?
    ஏதுமோ ரச்ச மில்லை,
கஞ்சன் மனத்துக் குகப்பன வேசெய்தாய்
    காயாம்பூ வண்ணங் கொண்டாய்.
6
250
பன்றியு மாமையு மீனமு மாகிய
    (*)பார்க்கடல் வண்ணா, உன்மேல்
கன்றி னுருவாகி மேய்புலத் தேவந்த
    (**)கள்ள வசுரர் தம்மை,
சென்று பிடித்துச் சிறுகைக ளாலே
    விளங்கா யெறிந்தாய் போலும்,
என்றுமென் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்
    (***)அங்ஙன மேயா வார்களே.

(*) பாற்கடல் வண்ணா என்றும் பாடம்.
(**) கள்ள வசுரன் தன்னை என்றும் பாடம்
(***) அங்ஙன மாவர்களே என்றும் பாடம்.
7
251
கேட்டறி யாதன கேட்கின்றேன் கேசவா*
    கோவல ரிந்தி ரற்கு,
காட்டிய சோறும் கறியும் தயிரும்
    கலந்துட னுண்டாய் போலும்,
ஊட்ட முதலிலே னுன்றன் னைக்கொண்
    டொருபோ துமெனக் கரிது
வாட்டமி லாப்புகழ் வாசுதே வா*உன்னை
    அஞ்சுவ னின்று தொட்டும்.
8
252
(*)திண்ணார் வெண்சங் குடையாய் திருநாள்
    திருவோண (**)மின்றேழா நாள்முன்,
பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப்
    பல்லாண்டு கூறு வித்தேன்,
கண்ணாலஞ் செய்யக் கறியும் கலத்த
    தரிசியு மாக்கி வைத்தேன்
கண்ணா*நீ நாளைத்தொட் டுக்கன்றின் பின்போகேல்
    கோலஞ் செய்திங் கேயிரு.

(*) திருமஞ்சன காலத்தில் சேவிக்கப்படுவது இப்பாசுரம்.
(**) மின்றேழு நாள் என்றும் பாடம்.
9
253
புற்றர வல்கு லசோதைநல் லாய்ச்சிதன்
    புத்தி ரன்கோ விந்தனை,
கற்றினம் மேய்த்து வரக்கண் டுகந்தவள்
    கற்பித்த மாற்ற மெல்லாம்,
செற்றமி லாதவர் வாழ்தரு தென்புது
    வைவிட் டுசித் தன்சொல்,
கற்றிவை பாடவல் லார்கடல் வண்ணன்
    கழலி ணைகாண் பர்களே.#
10

4. தழைகளும்
காலிப்பின் வரும் கண்ணனைக் கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
254
தழைகளும் தொங்கலும் ததும்பி யெங்கும்
    தண்ணுமை யெக்கம்மத் தளிதாழ் பீலி,
குழல்களும் கீதமு மாகி யெங்கும்
    கோவிந்தன் வருகின்ற கூட்டங் கண்டு,
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி
    மங்கைமார் சாலக வாசல் பற்றி,
நுழைவனர் நிற்பன ராகி எங்கும்
    உள்ளம் விட்டூண் மறந்தொழிந் தனரே.#
1
255
வல்லிநுண் ணிதழண்ண ஆடை கொண்டு
    வசையறத் திருவரை விரித்து டுத்து,
பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப்
    பணைக்கச் சுந்திப் பலதழை நடுவே,
முல்லை நன்னறு மலர்வேங் கைமலர்
    அணிந்து பல்லா யர்குழாம் நடுவே,
எல்லியம் போதா கப்பிள் ளைவரும்
    எதிர்நின் றங்கின வளையிழ வேன்மினே.
2
256
சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும்
    மேலா டையும்தோழன் மார்கொண் டோட,
ஒருகையா லொருவன்றன் தோளை யூன்றி
    ஆநிரை யினம்மீளக் குறித்த சங்கம்,
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்
    மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்,
அருகேநின் றாளென்பெண் நோக்கிக் கண்டாள்
    அதுகண் டிவ்வூரொன் றுபுணர்க் கின்றதே.
3
257
குன்றெ டுத்தா நிரைகாத் தபிரான்
    கோவல னாய்க்குழ லூதி யூதி,
கன்றுகள் மேய்த்துத்தன் தோழ ரோடு
    கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு,
என்று மிவனையொப் பாரை நங்காய்*
    கண்டறி யேன்ஏடி வந்து காணாய்,
ஒன்றும் நில்லா வளைகழன் றுதுகில்
    ஏந்திள முலையு மென்வச மல்லவே.
4
258
சுற்றி நின்றா யர்தழை களிடச்
    சுருள்பங்கி நேத்திரத் தால ணிந்து,
பற்றி நின்றா யர்கடைத் தலையே
    பாடவு மாடக்கண் டேன்அன் றிப்பின்
மற்றொரு வர்க்கென்னைப் பேச லொட்டேன்
    மாலிருஞ் சோலைஎம் மாயற் கல்லால்,
கொற்றவ னுக்கிவ ளாமென் றெண்ணிக்
    கொடுமின் கள்கொடீ ராகில்கோ ழம்பமே.
5
259
சிந்துர மிலங்கத் தன்திரு நெற்றிமேல்
    திருத்திய கோறம் பும்திருக் குழலும்,
அந்தர முழவத் தண்தழைக் காவின்கீழ்
    வருமாய ரோடுடன் வளைகோல் வீச,
அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை
    அறிந்தறிந் திவ்வீதி போது மாகில்,
பந்தைகொண் டானென்று வளைத்து வைத்துப்
    பவளவாய் முறுவலும் காண்போம் தோழி*
6
260
சாலப்பன் னிரைப்பின் னேதழைக் காவின்
    கீழ்த்தன் திருமேனி நின்றொளி திகழ,
நீல நன்னறுங் குஞ்சி நேத்திரத்
    தால ணிந்துபல் லாயர்குழாம் நடுவே,
கோலச் செந்தா மரைக்கண் மிளிரக்
    குழலூதி யிசைபா டிக்குனிந்து ஆயரோ
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
    அழகு கண்டென் மகளயர்க் கின்றதே.
7
261
சிந்துரப் பொடிகொண்டு சென்னி யப்பித்
    திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்,
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை
    அழகிய நேத்திரத் தால ணிந்து,
இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை
    எதிர்நின்றங் கினவளை யிழவே லென்ன,
சந்தியில் நின்று கண்டீர் நங்கை
    தன்துகி லொடுசரி வளைகழல் கின்றதே.
8
262
வலங்காதின் மேல்தோன்றிப் பூவ ணிந்து
    மல்லிகை வனமாலை மௌவல் மாலை,
சிலிங்காலத் தால்குழல் தாழ விட்டுத்
    தீங்குழல் வாய்மடுத் தூதி யூதி,
அலங்காரத் தால்வரு மாயப் பிள்ளை
    அழகுகண் டென்மக ளாசைப் பட்டு,
விலங்கிநில் லாதெதிர் நின்று கண்டீர்
    வெள்வளை கழன்று மெய்ம்மெலி கின்றதே.
9
263
விண்ணின் மீதம ரர்கள்விரும் பித்தொழ
    மிறைத்தாயர் பாடியில் வீதி யூடே,
கண்ணன் காலிப்பின் னேயெழுந் தருளக்
    கண்டிளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்,
வண்டமர் பொழில்புது வையர்கோன் விட்டு
    சித்தன் சொன்ன மாலை பத்தும்,
பண்ணின்பம் வரப்பாடும் பத்த ருள்ளார்
    பரமான வைகுந் தம்நண் ணுவரே*#
10

5. அட்டுக்குவி
கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகக்கொண்டு மழை தடுத்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
264
அட்டுக் குவிசோற் றுப்பருப் பதமும்
    அயிர்வா வியும்நெய் யளறும் அடங்கப்
பொட்டத் துற்றி,மா ரிடிப்பகை புணர்த்த
    பொருமா கடல்வண் ணன்பொறுத் தமலை,
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை
    வலைவாய் பற்றிக் கொண்டு,குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.#
1
265
வழுவொன் றுமில்லாச் செய்கைவா னவர்கோன்
    வலிப்பட் டுமுனிந் துவிடுக் கப்பட்ட
மழைவந் தெழுநாள் பெய்துமாத் தடைப்ப
    மதுசூ தனெடுத் துமறித் தமலை,
இழவு தரியா ததோரீற் றுப்பிடி
    இளஞ்சீ யம்தொடர்ந் துமுடு குதலும்,
குழவி யிடைக்கா லிட்டெதிர்ந் துபொரும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
2
266
அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும்
    ஆனா யருமா நிரையும் அலறி,
எம்மைச் சரண்ஏன் றுகொள்ளென் றிரப்ப
    இலங்கா ழிக்கைஎந் தையெடுத் தமலை,
தம்மைச் சரணென் றதம்பா வையரைப்
    புனமேய் கின்றமா னினங்காண் மினென்று
கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
3
267
கடுவாய்ச் சினவெங் கட்களிற் றினுக்குக்
    கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்,
அடிவா யுறக்கை யிட்டெழப் பறித்திட்
    டமரர் பெருமான் கொண்டுநின் றமலை,
கடல்வாய்ச் சென்றுமே கங்கவிழ்ந் திறங்கிக்
    கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய் படநின் றுமழை பொழியும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
4
268
வானத் திலுள்ளீர் வலியீ ருள்ளீரேல்
    அறையோ வந்துவாங் குமினென் பவன்போல்,
ஏனத் துருவா கியஈ சனெந்தை
    இடவ னெழவாங் கியெடுத் தமலை,
கானக் களியா னைதன்கொம் பிழந்து
    கதுவாய் மதஞ்சோ ரத்தன்கை யெடுத்து
கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
5
269
செப்பா டுடைய திருமா லவன்தன்
    செந்தா மரைக்கை விரலைந் தினையும்
கப்பா கமடுத் துமணி நெடுந்தோள்
    காம்பா கக்கொடுத் துக்கவித் தமலை,
எப்பா டும்பரந் திழிதெள் ளருவி
    இலங்கு மணிமுத் துவடம் பிறழ
குப்பா யமென நின்றுகாட் சிதரும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
6
270
படங்கள் பலவு முடைப்பாம் பரையன்
    படர்பூ மியைத்தாங் கிக்கிடப் பவன்போல்,
தடங்கை விரலைந் தும்மல ரவைத்துத்
    தாமோ தரன்தாங் குதட வரைதான்,
அடங்கச் சென்றிலங் கையையீ டழித்த
    அனுமன் புகழ்பா டித்தங்குட் டன்களை
, குடங்கைக் கொண்டுமந் திரகள்கண் வளர்த்தும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
7
271
சலமா முகில்பல் கணப்போர்க் களத்துச்
    சரமா ரிபொழிந் தெங்கும்பூ சலிட்டு,
நலிவா னுறக்கே டகம்கோப் பவன்போல்
    நாரா யணன்முன் முகங்காத் தமலை,
இலைவேய் குரம்பைத் தவமா முனிவர்
    இருந்தார் நடுவே சென்றணார் சொறிய,
கொலைவாய்ச் சினவேங் கைகள்நின் றுறங்கும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
8
272
வன்பேய் முலையுண் டதோர்வா யுடையன்
    வன்தூ ணெனநின் றதோர்வன் பரத்தை,
தன்பே ரிட்டுக்கொண் டுதர ணிதன்னில்
    தாமோ தரன்தாங் குதட வரைதான்,
முன்பே வழிகாட் டமுசுக் கணங்கள்
    முதுகில் பெய்துதம் முடைக்குட் டன்களை,
கொம்பேற் றியிருந் துகுதி பயிற்றும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
9
273
கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள்
    கோல முமழிந் திலவா டிற்றில,
வடிவே றுதிரு வுகிர்நொந் துமில

    மணிவண் ணன்மலை யுமோர்சம் பிர
தம், முடியே றியமா முகிற்பல் கணங்கள்
    முன்னெற் றிநரைத் தனபோ ல,எங்கும்
குடியே றியிருந் துமழை பொழியும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
10
274
அரவில் பள்ளிகொண்ட டரவம் துரந்திட்
    டரவப் பகையூர் தியவ னுடைய,
குரவில் கொடிமுல் லைகள்நின் றுறங்கும்
    கோவர்த் தனமென்னும் கொற்றக் குடைமேல்,
திருவில் பொலிமா மறைவா ணர்புத்தூர்த்
    திகழ்பட் டர்பிரான் சொன்னமா லைபத்தும்,
பரவு மனநன் குடைப்பத் தருள்ளார்
    பரமா னவைகுந் தம்நண் ணுவரே.#
11

6. நாவலம்
கண்ணன் வேய்ங்குழலூதிய சிறப்பு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
275
நாவலம் பெரிய தீவினில் வாழும்
    நங்கை மீர்களிதோ ரற்புதங் கேளீர்,
தூவ லம்புரி யுடைய திருமால்
    தூய வாயிற் குழலோசை வழியே,
கோவ லர்சிறுமி யரிளங் கொங்கை
    குதுக லிப்பஉட லுளவிழ்ந்து,எங்கும்
கால லுங்கடந் துகயிறு மாலை
    யாகி வந்து கவிழ்ந்துநின் றனரே.#
1
276
இடவ ணரைஇடத் தோளொடு சாய்த்து
    இருகை கூடப் புருவம்நெரிந் தேற,
குடவ யிறுபட வாய்கடை கூடக்
    கோவிந்தன் குழல்கொ டூதின போது,
மடம யில்களொடு மான்பிணை போலே
    மங்கை மார்கள் மலர்க்கூந்த லவிழ,
உடைநெ கிழவோர் கையால் துகில்பற்றி
    ஒல்கி யோடரிக்க ணோடநின் றனரே.
2
277
வானிள வரசு வைகுந்தக் குட்டன்
    வாசுதே வன்மது ரைமன்னன், நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன்
    கோவிந்தன் குழல்கொ டூதின போது,
வானிளம் படியர் வந்துவந் தீண்டி
    மனமுரு கிமலர்க் கண்கள் பனிப்ப,
தேனள வுசெறி கூந்த லவிழச்
    சென்னிவேர்ப் பச்செவி சேர்த்துநின் றனரே.
3
278
தேனுகன் பிலம்பன் காளிய னென்னும்
    தீப்பப் பூடுக ளடங்க உழக்கி,
கான கம்படி யுலாவி யுலாவிக்
    கருஞ்சிறுக் கன்குழ லூதின போது,
மேனகை யொடுதி லோத்தமை அரம்பை
    உருப்பசி யரவர் வெள்கி மயங்கி,
வானகம் படியில் வாய்திறப் பின்றி
    ஆடல் பாடலவை மாறினர் தாமே.
4
279
முன்நர சிங்மக தாகி அவுணன்
    முக்கி யத்தை முடிப்பான்மூ வுலகில்
(*)மன்னரஞ் சும்மது சூதனன் வாயில்
    குழலி னோசைசெவி யைப்பற்றி, வாங்க
நன்ன ரம்புடைய தும்புரு வோடு
    நாரதனும் தம்தம் வீணை மறந்து,
கின்ன ரமிது னங்களும் தம்தம்
    கின்ன ரம்தொடு கிலோமென் றனரே.

(*) மன்னரஞ்ச என்றொரு பாடம்.
5
280
செம்பெ ருந்தடங் கண்ணன்திரள் தோளன்
    தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்,
நம்பர மன்இந் நாள்குழ லூதக்
    கேட்டவர் கள்இட ருற்றன கேளீர்,
அம்பரந் திரியும் காந்தப்ப ரெல்லாம்
    அமுத கீதவலை யால்சுருக் குண்டு,
நம்பர மன்றென்று நாணி மயங்கி
    நைந்து சோர்ந்துகைம் மறித்துநின் றனரே.
6
281
புவியுள்நான் கண்டதோ ரற்புதங் கேளீர்
    பூணி மேய்க்குமிளங் கோவலர் கூட்டத்து
அவையுள், நாகத் தணையான்குழ லூத
    அமர லோகத் தளவுஞ்சென் றிசைப்ப,
அவியுணா மறந்து வானவ ரெல்லாம்
    ஆயர் பாடி நிறையப்புகுந் தீண்டி,
(*)செவியுள் நாவின் சுவைகொண்டு மகிழ்ந்து
    கோவிந்த னைத்தொடர்ந் தென்றும்வி டாரே.

(*) செவியுணாவின் சுவை என்றும் பாடம்.
7
282
சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச்
    செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப,
குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக்
    கோவிந்தன் குழல்கொ டூதின போது,
பறவையின் கணங்கள் கூடு துறந்து
    வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப,
கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக்
    கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே.
8
283
திரண்டெ ழுதழை மழைமுகில் வண்ணன்
    செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே,
சுருண்டி ருண்டகுழல் தாழ்ந்த முகத்தான்
    ஊது கின்றகுழ லோசை வழியே,
மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து
    மேய்ந்த புல்லும்கடை வாய்வழி சோர,
இரண்டு பாடும்துலுங் காப்புடை பெயரா
    எழுதுசித் திரங்கள் போலநின் றனவே.
9
284
கருங்கண் தோகையிற் பீலி யணிந்து
    கட்டிநன் குடுத்த பீதக ஆடை,
அதருங்கல வுருவின் ஆயர் பெருமான்
    அவனொரு வன்குழ லூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும்
    மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்,
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற
    பக்கம் நோக்கிஅவை செய்யும் குணமே.
10
285
குழலி ருண்டுசுருண் டேறிய குஞ்சிக்
    கோவிந்த னுடைய கோள வாயில்,
குழல்மு ழைஞ்சுகளி னூடு குமிழ்த்துக்
    கொழித்தி ழிந்தஅமு தப்புனல் தன்னை,
குழல்முழ வம்விளம் பும்புது வைக்கோன்
    விட்டு சித்தன் விரித்ததமிழ் வல்லார்,
குழலை வென்றகுளிர் வாயின ராகிச்
    சாது கோட்டியுள் கொள்ளப்படு வாரே.#
11

7. ஐயபுழுதி
திருமாலிடம் ஈடுபட்ட மகளின் இளமை கண்டு நற்றாய் இரங்குதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
286
ஐய புழுதி யுடம்ப
    ளைந்திவள் பேச்சு மலந்தலையாய்,
செய்ய நூலின் சிற்றாடை
    செப்ப னுடுக்கவும் வல்லளல்லள்,
கையி னிற்சிறு தூதை
    யோடிவள் முற்றில் பிரிந்துமிலள்,
பைய ரவணைப் பள்ளி
    யானொடு கைவைத் திவள்வருமே.#
1
287
வாயில் பல்லு மெழுந்தில
    மயிரும் முடிகூ டிற்றில,
சாய்வி லாத கநற்தலைச்
    சிலபிள் ளைகளோ டிணங்கி,
தீயி ணக்கிணங் காடிவந்திவள்
    தன்னன்ன செம்மை சொல்லி,
மாயன் மாமணி வண்ணன்
    மேல்இவள் மாலுறு கின்றாளே.
2
288
பொங்கு வெண்மணற் கொண்டு
    சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில்,
சங்கு சக்கரம் தண்டு
    வாள்வில்லு மல்ல திழைக்கலுறாள்,
கொங்கை யின்னம் குவிந்தெ
    ழுந்தில கோவிந்த னோடிவளை,
சங்கை யாகிஎன் னுள்ளம்
    நாடொறும் தட்டுளுப் பாகின்றதே.
3
289
ஏழை பேதையோர் பாலகன்
    வந்தென் பெண்மக ளை(*)எள்கி,
தோழி மார்பலர் கொண்டு
    போய்ச்செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ
    மோழையில் பாய்ச்சி யகப்படுத்தி
மூழை யுப்பறி யாத
    தென்னும் மூதுரையு மிலளே.

(*) இள்கி என்றும் பாடம்.
4
290
நாடு மூரு மறிய
    வேபோய் நல்ல துழாயலங்கல்
சூடி, நாராணன் போமிட
    மெல்லாம் சோதித் துழிதருகின்றாள்,
கேடு வேண்டு கின்றார்
    பலருளர் கேசவ னோடிவளை,
பாடி காவ லிடுமிடி
    னென்றென்று பார்தடு மாறினதே.
5
291
பட்டங் கட்டிப் பொற்றோடு
    பெய்திவள் பாடக மும்சிலம்பும்,
இட்ட மாக வளர்த்தெடுத்
    தேனுக் கென்னோ டிருக்கலுறாள்,
பொட்டப் போய்ப்புறப் பட்டுநின்றவள்
    பூவைப்பூ வண்ணா வென்னும்,
வட்ட வார்குழல் மங்கை
    மீர்*இவள் மாலுறு கின்றாளே.
6
292
பேச வும்(*)தரி யாத
    பெண்மையின் பேதையேன் பேதையிவள்,
கூச மின்றிநின் றார்கள்
    தம்மெதிர் கோல்கழிந் தான்மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ
    யென்றும் கிஞ்சுக வாய்மொழியாள்,
வாச வார்குழல் மங்கை
    மீர்*இவள் மாலுறு கின்றாளே.

(*) தெரிதாய என்றும் பாடம்.
7
293
காறை பூணும் கண்ணாடி
    காணும்தன் கையில் வளைகுலுக்கும்,
கூறை யுடுக்கு மயர்க்கும்தன்
    கொவ்வைச் செவ்வாய் திருத்தும்,
தேறித் தேறிநின் றாயிரம்பேர்த்
    தேவன் திறம்பி தற்றும்,
மாறில் மாமணி வண்ணன்
    மேலிவள் மாலுறு கின்றாளே.
8
294
கைத்தலத் துள்ள மாடழியக்
    கண்ணா லங்கள் செய்துஇவளை
வைத்து வைத்துக் கொண்டென்ன
    வாணிபம் நம்மை (*)வடுப்படுத்தும்,
செய்த்த லையெழு நாற்றுப்
    போலவன் செய்வன செய்துகொள்ள,
மைத்த டமுகில் வண்ணன்
    பக்கல் வளர விடுமின்களே.

(*) வடுப்படுக்கும் என்றும் பாடம்.
9
295
பெருப்பெ ருத்தகண் ணாலங்கள்செய்து
    பேணி நம்மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க
    இவளுமொன் றெண்ணு கின்றாள்,
மருத்து வப்பதம் நீங்கினா
    ளென்னும் வார்த்தை படுவதன்முன்,
ஒருப்ப டுத்திடு மின்இவளை
    உலகளந் தானி டைக்கே.
10
296
ஞால முற்றுமுண் டாலி
    லைத்துயில் நாரா யணனுக்கு,இவள்
மால தாகி மகிழ்ந்தன
    ளென்று தாயுரை செய்ததனை,
கோல மார்பொழில் சூழ்புது
    வையர்கோன் விட்டுசித் தன்சொன்ன,
மாலை பத்தும் வல்ல
    வர்கட் கில்லை வருதுயரே.#
11

8. நல்லதோர் தாமரை
மாயவன் பின்சென்ற மகளை நினைத்துத் தாய் பலபடியாகக் கூறி ஏங்குதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
297
நல்லதோர் தாமரைப் பொய்கை
    நாண்மலர் மேல்பனி சோர,
அல்லியும் தாது முதிர்ந்திட்,
    டழகழிந் தாலொத்த தாலோ,
இல்லம் வெறியோடிற் றாலோ
    என்மக ளையெங்குங் காணேன்,
மல்லரை யட்டவன் பின்போய்
    மதுரைப்பு றம்புக்காள் கொல்லோ.#
1
298
ஒன்று மறிவொன்றில் லாத
    உருவறைக் கோபாலர் தங்கள்,
கன்றுகால் மாறுமா போலே
    கன்னி யிருந்தாளைக் கொண்டு,
நன்றும் கிறிசெய்து போனான்
    நாராய ணன்செய்த தீமை,
என்று மெமர்கள் குடிக்கோர்
    ஏச்சுச்சொ லாயிடுங் கொல்லோ.
2
299
குமரி மணஞ்செய்து கொண்டு
    கோலஞ்செய் தில்லத் திருத்தி,
தமரும் பிறரு மறியத்
    தாமோத ரற்கென்று சாற்றி,
அமரர் பதியுடைத் தேவி
    அரசாணி யைவழி பட்டு,
துமில மெழப்பறை கொட்டித்
    தோரணம் நாட்டிடுங் கொல்லோ.
3
300
ஒருமகள் தன்னை யுடையேன்
    உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன்
    செங்கண்மால் தான்கொண்டு போனான்,
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
    பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
    மணாட்டுப்பு றம்செய்யுங் கொல்லோ.
4
301
தம்மாமன் நந்தகோ பாலன்
    தழிஇக்கொண் டென்மகள் தன்னை,
செம்மாந் திரேயென்று சொல்லிச்
    செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்,
கொம்மை முலையு மிடையும்
    கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு,
இம்மக ளைப்பெற்ற தாயர்
    இனித்தரி யாரென்னுங் கொல்லோ.
5
302
வேடர் மறக்குலம் போலே
    வேண்டிற்றுச் செய்தென் மகளை,
கூடிய கூட்டமே யாகக்
    கொண்டு குடிவாழுங் கொல்லோ,
நாடு நகரு மறிய
    நல்லதோர் கண்ணாலஞ் செய்து,
சாடிறப் பாய்ந்த பெருமான்
    தக்கவா கைப்பற்றுங் கொல்லோ.
6
303
அண்டத் தமரர் பெருமான்
    ஆழியான் இன்றென் மகளை,
பண்டப் பழிப்புகள் சொல்லிப்
    பரிசற ஆண்டிடுங் கொல்லோ,
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து
    கோவலப் பட்டங் கவித்து,
பண்டை மணாட்டிமார் முன்னே
    பாதுகா வல்வைக்குங் கொல்லோ.
7
304
குடியில் பிறந்தவர் செய்யும்
    குணமொன்றும் செய்தில னந்தோ,
நடையொன்றும் செய்திலன் நங்காய்*
    நந்தகோ பன்மகன் கண்ணன்,
இடையிரு பாலும்வ ணங்க
    இளைத்திளைத் தென்மக ளேங்கி,
கடைகயி றேபற்றி வாங்கிக்
    கைதழும் பேறிடுங் கொல்லோ.
8
305
வெண்ணிறத் தோய்தயிர் தன்னை
    வெள்வரைப் பின்முன் னெழுந்து,
கண்ணுறங் காதே யிருந்து
    கடையவும் தான்வல்லள் கொல்லோ,
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
    உலகளந் தான்என் மகளை,
பண்ணறை யாப்பணி கொண்டு
    பரிசற ஆண்டிடுங் கொல்லோ.
9
306
மாயவன் பின்வழி சென்று
    வழியிடை மாற்றங்கள் கேட்டு,
ஆயர்கள் சேரியி லும்புக்கு
    (*)அங்குத்தை மாற்றமு மெல்லாம்,
தாயவள் சொல்லிய சொல்லைத்
    தண்புது வைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்பத்தும் வல்லார்
    தூமணி வண்ணனுக் காளரே.#

(*) அங்குற்ற என்றும் பாட பேதம்.
10

9. என்னாதன்
இராமகிருஷ்ணாவதாரங்களின் செயல்களை இரு தோழியர் கூறிப் பரவசமடைந்து விளையாடுதல் (உந்தி பறத்தல்)
கலித்தாழிசை
307
என்னாதன் தேவிக்கன் றின்பப்பூ ஈயாதாள்,
தன்னாதன் காணவே தண்பூ மரத்தினை,
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட,
என்னாதன் வன்மையைப் பாடிப்பற
    எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.#
1
308
என்வில் வலிகண்டு போவென் றெதிர்வந்தான்
தன்,வில்லி னோடும் தவத்தை யெதிர்வாங்கி,
முன்வில் வலித்து முதுபெண் ணாயிருண்டான்
தன்,வில்லின் வன்மையைப் பாடிப்பற
    எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.
2
309
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு,
விருப்புற்றங் கேக விரைந்தெதிர் வந்து,
செருக்குற்றான் வீரஞ் சிதைய, தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
    தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.
3
310
மாற்றுத்தாய் சென்று வனம்போகே யென்றிட,
ஈற்றுத்தாய் பின்தொடர்ந் தெம்பிரான் என்றழ,
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன,
சீற்ற மிலாதானைப் பாடிப்பற
    சீதை மணாளனைப் பாடிப்பற.
4
311
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம கைசெய்து,
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு,
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த,
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற
    அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.
5
312
முடியொன்றி மூவுல கங்களு மாண்டு,உன்
அடியேற் கருளென் றவன்பின் தொடர்ந்த,
படியில் குண்ததுப் பரதநம் பிக்கு,அன்
றடிநிலை யீந்தானைப் பாடிப்பற
    அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
6
313
காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டு,அவன்
நீள்முடி யைந்திலும் நின்று நடஞ்செய்து,
மீள அவனுக் கருள்செய்த வித்தகன்,
தோள்வலி வீரமே பாடிப்பற
    தூமணி வண்ணனைப் பாடிப்பற.
7
314
தாற்கிளந் தம்பிக் கரசீந்து, தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி, நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவியொடு மூக்கு,அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற
    அயோத்திக் கரசனைப் பாடிப்பற.
8
315
மாயச் சகட முதைத்து மருதிறுத்து,
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்து.அணி
nவியன் குழலூதி வித்தக னாய்நின்ற,
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற
    ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.
9
316
காரார் கடலை யடைத்திட் டிலங்கைபுக்கு,
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்,
நேரா அவன்தம்பிக் கேநீ ளரசீந்த,
ஆரா வமுதனைப் பாடிப்பற
    அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.
10
தரவு கொச்சகக் கலிப்பா
317
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று,
உந்தி பறந்த வொளியிழை யார்கள்சொல்,
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்,
ஐந்தினோ டைந்தும்வல் லார்க்கல்ல லில்லையே.#
11

10. நெறிந்த கருங்குழல்
சீதைக்கு அனுமன் கூறிய அடையாளம்
கலி விருத்தம்
318
நெறிந்தகருங் குழல்மடவாய்*
    நின்னடியேன் விண்ணப்பம்,
செறிந்தமணி முடிச்சனகன்
    சிலையறுத்து நினைக்கொணர்ந்த
தறிந்து,அரசு களைகட்ட
    அருந்தவத்தோ னிடைவிலங்க,
செறிந்தசிலை கொடுதவத்தைச்
    சிதைத்ததுமோ ரடையாளம்.#
1
319
அல்லியம்பூ மலர்க்கோதாய்*
    அடிபணிந்தேன் விண்ணப்பம்,
சொல்லுகேன் கேட்டருளாய்
    துணைமலர்க்கண் மடமானே,
எல்லியம்போ தினிதிருத்தல்
    இருந்ததோ ரிடவகையில்,
மல்லிகைமா மாலைகொண்டங்
    கார்த்ததுமோ ரடையாளம்.
2
320
கலக்கியமா மனத்தனளாய்க்
    கைகேசி வரம்வேண்ட,
மலக்கியமா மனத்தனனாய்
    மன்னவனும் மறாதொழிய,
'குலக்குமரா* காடுறையப்
    போ' என்று விடைகொடுப்ப,
இலக்குமணன் தன்னொடுமங்
    கேகியதோ ரடையாளம்.
3
321
வாரணிந்த முலைமடவாய்*
    வைதேவீ* விண்ணப்பம்,
தேரணிந்த அயோத்தியர்கோன்
    பெருந்தேவீ* கேட்டருளாய்,
கூரணிந்த வேல்வலவன்
    குகனோடும் கங்கைதன்னில்,
சீரணிந்த தோழதையைக்
    கொண்டதுமோ ரடையாளம்.
4
322
மானமரு மென்னோக்கி*
    வைதேவீ* விண்ணப்பம்,
கானமரும் கல்லதர்போய்க்
    காடுறைந்த காலத்து,
தேனமரும் பொழிற்சாரல்
    சித்திரகூ டத்திருப்ப,
பான்மொழியாய்* பரதநம்பி
    பணிந்ததுமோ ரடையாளம்.
5
323
சித்திரகூ டத்திருப்பச்
    சிறுகாக்கை முலைதீண்ட,
அத்திரமே கொண்டெறிய
    அனைத்துலகும் திரிந்தோடி,
'வித்தகனே* இராமாவோ*
    நின்னபயம்*' என்றழைப்ப,
அத்திரமே அதன்கண்ணை
    அறுத்ததுமோ ரடையாளம்.
6
324
மின்னொத்த நுண்ணிடையாய்
    மெய்யடியேன் விண்ணப்பம்,
பொன்னொத்த மானென்று
    புகுந்தினிது விளையாட,
நின்னன்பின் வழிநின்று
    சிலைபிடித்தெம் பிரானேக,
பின்னேஅங் கிலக்குமணன்
    பிரிந்ததுமோ ரடையாளம்.
7
325
மைத்தகுமா மலர்க்குழலாய்*
    வைதேவீ* விண்ணப்பம்,
ஒத்தபுகழ் வானரக்கோன்
    உடனிருந்து நினைத்தேட,
அத்தகுசீ ரயோத்தியர்கோன்
    அடையாள மிவைமொழிந்தான்,
இத்தகையான் அடையாளம்
    ஈதவன்கைம் மோதிரமே.
8
326
திக்குநிறை புகழாளன்
    தீவேள்விச் சென்றந்நாள்,
மிக்கபெருஞ் சடைநடுவே
    வில்லிறுத்தான் மோதிரங்கண்டு,
'ஒக்குமா லடையாளம்
    அனுமான்*' என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு, உகந்தனளால்
    மலர்க்குழலாள் சீதையுமே.#
9
327
வாராரும் முலைமடவாள்
    வைதேவி தனைக்கண்டு,
சீராரும் திறல்அனுமன்
    தெரிந்துரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப்புதுவைப்
    பட்டர்பிரான் பாடல்வல்லார்,
ஏராரும் வைகுந்தத்
    திமையவரோ டிருப்பரோ.#
10
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

நான்காம் பத்து
1. கதியாயிரம்
பகவானைக் காண்பதற்குத் தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்
கலிநிலைத்துறை
328
கதிரா யிரமிரவி கலந்தெறித்
    தாலொதத நீள்முடியன்,
எதிரில் பெருமை இராமனை
    இருக்குமிடம் நாடுதிரேல்,
அதிரும் கழல்பொருதோள் இரணியன்
    ஆகம் பிளந்து, அரியாய்
உதிர மளைந்தகையோ டிருந்தானை
    உள்ளவா கண்டாருளர்.#
1
329
நாந்தகம் சங்குதண்டு நாணொலிச்
    சார்ங்கம் திருச்சக்கரம்,
ஏந்து பெருமை இராமனை
    இருக்குமிடம் நாடுதிரேல்,
காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்
    கடுஞ்சிலை சென்றிறுக்க,
வேந்தர் தலைவன் சனகராசன்தன்
    வேள்வியிற் கண்டாருளர்.
2
330
கொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்
    சேனை பொருதழிய
சிலையால் மராமர மெய்ததேவனைச்
    சிக்கென நாடுதிரேல்,
தலையால் குரக்கினம் தாங்கிச்சென்று
    தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை
    (*)அங்குத்தைக் கண்டாருளர்.

(*) அங்குற்று என்றும் பாடம்.
3
331
தோயம் பரந்த நடுவுசூழலில்
    தொல்லை வடிவுகொண்ட,
மாயக் குழவியதனை நாடுறில்
    வம்மின் சுவடுரைக்கேன்,
ஆயர் மடமகள் பின்னைக்காகி
    ஆடல்விடை யேழினையும்,
வீயப் பொருது வியர்த்துநின்றானை
    மெய்ம்மையே கண்டாருளர்.
4
332
நீரேறு செஞ்சடை நீலகண்டனும்
    நான்முகனும், முறையால்
சீரேறு வாசகஞ் செய்யநின்ற
    திருமாலை நாடுதிரேல்,
வாரேறு கொங்கை உருப்பிணியை
    வலியப் பிடித்துக்கொண்டு
தேரேற்றி, சேனை நடுவுபோர்
    செய்யச் சிக்கெனக் கண்டாருளர்.
5
333
பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்
    புணர்முலை வாய்மடுக்க
வல்லானை, மாமணி வண்ணனை
    மருவுமிடம் நாடுதிரேல்,
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு
    பௌவ மெறிதுவரை,
எல்லாரும் சூழ்ச்சிங் காசனத்தே
    இருந்தானைக் கண்டாருளர்.
6
334
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த்
    திருச்சக்கர மேந்துகையன்,
உள்ள இடம்வினவி லுமக்கிறை
    வம்மின் சுவடுரைக்கேன்,
வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித்
    தேர்மிசை முன்புநின்று,
கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம்
    கைசெய்யக் கண்டாருளர்.
7
335
நாழிகை கூறிட்டுக் காத்துநின்ற
    அரசர்கள் தம்முகப்பே,
நாழிகை போகப் படைபொருதவன்
    தேவகி தன்சிறுவன்,
ஆழிகொண் டன்றிரவி மறைப்பச்
    சயத்திர தன்தலையை,
பாழி லுருளப் படைபொருதவன்
    பக்கமே கண்டாருளர்.
8
336
மண்ணும் மலையும் மறிகடல்களும்
    மற்றும் யாவுமெல்லாம்,
திண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச்
    சிக்கென நாடுதிரேல்,
எண்ணற் கரியதோ ரேனமாகி
    இருநிலம் புக்கிடந்து,
வண்ணக் கருங்குழல் மாதரோடு
    மணந்தானைக் கண்டாருளர்.
9
337
கரிய முகில்புரை மேனிமாயனைக்
    கண்ட சுவடுரைத்து,
புரவி முகஞ்செய்து செந்நெலோங்கி
    விளைகழ னிப்புதுவை,
திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான்
    சொன்ன மாலைபத்தும்,
பரவு மனமுடைப் பத்தருள்ளார்
    பரமனடி சேர்வர்களே.#
10

2. அலம்பா வெருட்டா
திருமாலிருஞ்சோலை மலைச் சிறப்பு
கலிநிலைத்துறை
338
அலம்பா வெருட்டாக் கொன்று
    திரியு மரக்கரை,
குலம்பாழ் படுத்துக் குலவிளக்
    காய்நின்ற கோன்மலை,
சிலம்பார்க்க வந்து தெய்வ
    மகளிர்க ளாடும்சீர்,
சிலம்பாறு பாயும் தென்திரு
    மாலிருஞ் சோலையே.
1
339
வல்லாளன் தோளும் வாளரக்கன்
    முடியும், தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்
    தான்பொருந் தும்மலை,
எல்லா விடத்திலு மெங்கும்
    பரந்துபல் லாண்டொலி,
செல்லா நிற்கும் சீர்த்தென்
    திருமாலிருஞ் சோலையே.
2
340
தக்கார்மிக் கார்களைச் சஞ்சலஞ்
    செய்யும் சலவரை,
தெக்கா நெறியே போக்குவிக்கும்
    செல்வன் பொன்மலை,
எக்கால மும்சென்று சேவித்
    திருக்கும் அடியரை,
அக்கா னெறியை மாற்றும்
    தண்மாலிருஞ் சோலையே.
3
341
ஆனாயர் கூடி அமைத்த
    விழவை, அமரர்தம்
கோனார்க் கொழியக் கோவர்த்
    தனத்துச்செய் தான்மலை
வானாட்டி னின்றும் மாமலர்க்
    கற்பகத் தொத்திழி,
தேனாறு பாயும் தென்திரு
    மாலிருஞ் சோலையே.
4
342
ஒருவா ரணம்பணி கொண்டவன்
    பொய்கையில், கஞ்சன்றன்
ஒருவா ரணமுயி ருண்டவன்
    சென்றுறை யும்மலை,
கருவா ரணம்தன் பிடிதுறந்
    தோட, கடல்வண்ணன்
திருவாணை கூறத் திரியும்தண்
    மாலிருஞ் சோலையே.
5
343
ஏவிற்றுச் செய்வா னேன்றெதிர்ந்து
    வந்த மல்லரை,
சாவத் தகர்த்த சாந்தணி
    தோள்சது ரன்மலை,
ஆவத் தனமென் றமரர்
    களும்நன் முனிவரும்,
சேவித் திருக்கும் தென்திரு
    மாலிருஞ் சோலையே.
6
344
மன்னர் மறுக மைத்துனன்
    மார்க்கொரு தேரின்மேல்,
முன்னங்கு நின்று மோழை
    யெழுவித்த வன்மலை,
கொன்னவில் கூர்வேல் கோனெடு
    மாறன்தென் கூடற்கோன்,
தென்னன்கொண் டாடும் தென்திரு
    மாலிருஞ் சோலையே.
7
345
குறுகாத மன்னரைக் கூடு
    கலக்கி,வெங் கானிடைச்
சிறுகால் நெறியே போக்குவிக்
    கும்செல்வன் பொன்மலை,
அறுகால் வரிவண் டுகளா
    யிரநாமஞ் சொல்லி,
சிறுகாலைப் பாடும் தென்திரு
    மாலிருஞ் சோலையே.
8
346
சிந்தப் புடைத்துச் செங்குருதி
    கொண்டு, பூதங்கள்
அந்திப் பலிகொடுத் தாவத்
    தனஞ்செய் யப்பன்மலை,
இந்திர கோபங்க ளெம்பெரு
    மான்கனி வாயொப்பான்,
சிந்தும் புறவில் தென்திரு
    மாலிருஞ் சோலையே.
9
347
எட்டுத் திசையு மெண்ணிறந்
    தபெருந் தேவிமார்,
விடடு விளங்க வீற்றி
    ருந்த விமலன்மலை,
பட்டிப் பிடிகள் பகடுரிஞ்சிச்
    சென்று, மாலைவாய்த்
தெட்டித் திளைக்கும் தென்திரு
    மாலிருஞ் சோலையே.
10
348
மருதப் பொழிலணி மாலிருஞ்
    சோலை மலைதன்னை,
கருதி யுறைகின்ற கார்க்கடல்
    வண்ணனம் மான்தன்னை,
விரதம்கொண் டேத்தும் வில்லிபுத்
    தூர்விட்டு சித்தன்சொல்,
கருதி யுரைப்பவர் கண்ணன்
    கழலிணை காண்பர்களே.#
11

3. உருப்பிணி நங்கை
திருமாலிருஞ்சோலையின் மாட்சி
கலி விருத்தம்
349
உருப்பிணி நங்கைதன்னை
    மீட்பான்தொடர்ந் தோடிச்சென்ற,
உருப்பனை யோட்டிக்கொண்டிட்
    டுறைத்திட்ட உறைப்பன்மலை
பொருப்பிடைக் கொன்றைநின்று
    முறியாழியுங் காசுங்கொண்டு
விருப்பொடு பொன்வழங்கும்
    வியன்மாலிருஞ் சோலையதே.#
1
350
கஞ்சனும் காளியனும்,
    களிறும்மரு துமெருதும்,
வஞ்சனை யில்மடிய
    வளர்ந்தமணி வண்ணன்மலை,
நஞ்சுமிழ் நாகமெழுந்
    தணவிநளிர் மாமதியை,
செஞ்சுடர் நாவளைக்கும்
    திருமாலிருஞ் சோலையதே.
2
351
மன்னு நரகன்தன்னைச்
    சூழ்போகி வளைத்தெறிந்து,
கன்னி மகளிர்தம்மைக்
    கவர்ந்தகடல் வண்ணன்மலை,
புன்னை செருந்தியொடு
    புனவேங்கையும் கோங்கும்நின்று,
பொன்னரி மாலைகள்சூழ்
    பொழில் மாலிருஞ் சோலையதே.
3
352
மாவலி தன்னுடைய
    மகன்வாணன் மகளிருந்த,
காவலைக் கட்டழித்த
    தனிக்காளை கருதும்மலை,
கோவலர் கோவிந்தனைக்
    குறமாதர்கள் பண்குறிஞ்சிப்
பாவொலி பாடிநடம்
    பயில்மாலிருஞ் சோலையதே.
4
353
பலபல நாழஞ்சொல்லிப்
    பழித்தசிசு பாலன்றன்னை,
அலவலை மைதவிர்த்த
    அழகன்அலங் காரன்மலை,
குலமலை கோலமலை
    குளிர்மாமலை கொற்றமலை,
நிலமலை நீண்டமலை
    திருமாலிருஞ் சோலையதே.#
5
354
பாண்டவர் தம்முடைய
    பாஞ்சாலி மறுக்கமெல்லாம்,
ஆண்டங்கு நூற்றுவர்தம்
    பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை,
பாண்தகு வண்டினங்கள்
    பண்கள்பாடி மதுப்பருக,
தோண்ட லுடையமலை
    தொல்லைமாலிருஞ் சோலையதே.
6
355
கனங்குழை யாள்பொருட்டாக்
    கணைபாரித்து, அரக்கர்தங்கள்
(*)இனம்கழு வேற்றுவித்த
    எழில்தோளெம் மிராமன்மலை,
கனங்கொழி தெள்ளருவி
    வந்துசூழ்ந்தகல் ஞாலமெல்லாம்,
இனங்குழு வாடும்மலை
    எழில்மாலிருஞ் சோலையதே.

(*) இனங்கழுகேற்றுவித்த என்றும் பாடம்.
7
356
எரிசித றும்சரத்தால்
    இலங்கையினை, தன்னுடைய
வரிசிலை வாயிற்பெய்து
    வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த,
அரைய னமரும்மலை
    அமரரொடு கோனும்சென்று,
திரிசுடர் சூழும்மலை
    திருமாலிருஞ் சோலையதே.
8
357
கோட்டுமண் கொண்டிடந்து
    குடங்கையில்மண் கொண்டளந்து,
மீட்டுமஃ துண்டுமிழ்ந்து
    விளையாடு விமலன்மலை,
ஈட்டிய பல்பொருள்கள்
    எம்பிரானுக் கடியுறையென்று,
ஓட்டருந்தண் சிலம்பாறுடை
    மாலிருஞ் சோலையதே.
9
358
ஆயிரம் தோள்பரப்பி
    முடியாயிர மின்னிலக,
ஆயிரம் பைந்தலைய
    அனந்தசயன னாளும்மலை,
ஆயிர மாறுகளும்
    சுனைகள்பல வாயிரமும்,
ஆயிரம்பூம் பொழிலுமுடை
    திருமாலிருஞ் சோலையதே.#
10
359
மாலிருஞ் சோலையென்னும்
    மலையையுடை யமலையை,
நாலிரு மூர்த்திதன்னை
    நால்வேதக் கடலமுதை,
மேலிருங் கற்பகத்தை
    வேதாந்த விழுப்பொருளின்,
மேலிருந்த விளக்கை
    விட்டுசித்தன் விரித்தனனே*#
11

4. நாவ காரியம்
மனம் வாக்கு காயம் ஆகியவற்றைக்கொண்டு திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும் அனுபவிக்காதவரை இழித்தும் கூறல்
சந்தக் கலி விருத்தம்
360
நாவகாரியம் சொல்லிலாதவர்
    நாடொறும்விருந் தோம்புவார்,
தேவகாரியம் செய்துவேதம்
    பயின்றுவாழ்திருக் கோட்டியூர்,
மூவர்காரிய மும்திருத்தும்
    முதல்வனைச்சிந்தி யாத,அப்
பாவகாரிக ளைப்படைத்தவன்
    எங்ஙனம்படைத் தான்கொலோ*#
1
361
குற்றமின்றிக் குணம்பெருக்கிக்
    குருக்களுக்கனு கூலராய்,
செற்றமொன்றுமி லாதவண்கையி
    னார்கள்வாழ்திருக் கோட்டியூர்,
துற்றியேழுல குண்டதூமணி
    வண்ணன்தன்னைத் தொழாதவர்,
பெற்றதாயர் வயிற்றினைப்பெரு
    நோய்செய்வான் பிறந்தார்களே.
2
362
வண்ணநன்மணி யும்மரகத
    மும்மழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ்,திருக் கோட்டியூர்த்திரு
    மாலவன்திரு நாமங்கள்,
எண்ணக்கண்ட விரல்களால்இறைப்
    பொழுதுமெண்ணகி லாதுபோய்,
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்
    கவளமுந்துகின் றார்களே.
3
363
உரகமெல்லாணை யான்கையிலுறை
    சங்கம்போல்மட அன்னங்கள்
நிரைகணம்பரந் தேறும்செங்கம
    லவயல்திருக் கோட்டியூர்,
நரகநாசனை நாவில்கொண்டழை
    யாதமானிட சாதியர்,
பருகுநீரு முடுக்கும்கூறையும்
    பாவஞ்செய்தன தாங்கொலோ.
4
364
ஆமையின்முது கத்திடைக்குதி
    கொண்டுதூமலர் சாடிப்போய்,
தீமைசெய்திள வாளைகள்விளை
    யாடுநீர்த்திருக் கோட்டியூர்,
நேமிசேர்தடங் கையினானை
    நினைப்பிலாவலி நெஞ்சுடை,
பூமிபாரங்க ளுண்ணுஞ்சோற்றினை
    வாங்கிப்புல்லைத் திணிமினே.
5
365
பூதமைந்தொடு வேள்வியைந்து
    புலன்களைந்து பொறிகளால்,
ஏதமொன்றுமி லாதவண்கையி
    னார்கள்வாழ்திருக் கோட்டியூர்,
நாதனைநர சிங்கனைநவின்
    றேத்துவார்க ளுழக்கிய,
பாததூளி படுதலாலிவ்
    வுலகம்பாக்கியம் செய்ததே.
6
366
குருந்தமொன்றொசித் தானொடுஞ்சென்று
    கூடியாடி விழாச்செய்து,
திருந்துநான்மறை யோரிராப்பகல்
    ஏத்திவாழ்திருக் கோட்டியூர்,
கருந்தடமுகில் வண்ணனைக்கடைக்
    கொண்டுகைதொழும் பத்தர்கள்,
இருந்தவூரி லிருக்கும்மானிடர்
    எத்தவங்கள்செய் தார்கொலோ.
7
367
நளிர்ந்தசீலன் நயாசலன்அபி
    மானதுங்கனை, நாடொறும்
தெளிந்தசெல்வனைக் சேவகங்கொண்ட
    செங்கண்மால்திருக் கோட்டியூர்,
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன்குணம்
    பாடுவாருள்ள நாட்டினுள்,
விளைந்ததானிய முமிராக்கதர்
    மீதுகொள்ளகி லார்களே.
8
368
கொம்பினார்பொழில் வாய்க்குயிலினம்
    கோவிந்தன்குணம் பாடுசீர்,
செம்பொனார்மதில் சூழ்செழுங்கழ
    னியுடைத்திருக் கோட்டியூர்,
நம்பனைநர சிங்கனைநவின்
    றேத்துவார்களைக் கண்டக்கால்,
எம்பிரான்றன சின்னங்களிவர்
    இவரென்றாசைகள் தீர்வனே.
9
369
காசின்வாய்க்கரம் விற்கிலும்கர
    வாதுமாற்றிலி சோறிட்டு,
தேசவார்த்தைப டைக்கும்வண்கையி
    னார்கள்வாழ்திருக் கோட்டியூர்,
கேசவா*புரு டோத்தமா*கிளர்
    சோதியாய்*குற ளாவென்று,
பேசுவாரடி யார்களெந்தம்மை
    விற்கவும் பெறுவார்களே.
10
370
சீதநீர்புடை சூழ்செழுங்கழ
    னியுடைத்திருக் கோட்டியூர்,
ஆதியானடி யாரையும்அடி
    மையின்றித்திரி வாரையும்,
கோதில்பட்டர் பிரான்குளிர்புது
    வைமன்விட்டு சித்தன்சொல்,
ஏதமின்றியு ரைப்பவர்
    இருடீகேசனுக் காளரே.#
11

5. ஆசைவாய்
பகவானிடம் மனம் செலுத்தாமல் காலங்கடத்தும் மக்களுக்கு நல்லுரை கூறல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
371
ஆசை வாய்ச்சென்ற சிந்தைய ராகி
    அன்னை யத்தனென் புத்திரர் பூமி,
வாச வார்குழ லாளென்று மயங்கி
    மாளு மெல்லைக்கண் வாய்திற வாதே,
கேச வாபுரு டோத்தமா என்றும்
    கேழ லாகிய கேடிலீ யென்றும்,
பேசு வாரவ ரெய்தும் பெருமை
    பேசு வான்புகில் நம்பர மன்றே.#
1
372
சீயி னால்செறிந் தேறிய புண்மேல்
    செற்ற லேறிக் குழம்பிருந்து, எங்கும்
ஈயி னாலரிப் புண்டு மயங்கி
    எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்,
வாயி னால்நமோ நாரணா வென்று
    மத்த கத்திடைக் கைகளைக் கூப்பிப்
போயினால் பின்னை, இத்திசைக் கென்றும்
    பிணைகொ டுக்கிலும் போகவொட் டாரே.
2
373
சோர்வி னால்பொருள் வைத்ததுண் டாகில்
    சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து,
ஆர்வி னாவிலும் வாய்திற வாதே
    அந்த கால மடைவதன் முன்னம்,
மார்வ மென்பதோர் கோயி லமைத்து
    மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி,
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்
    கரவ தண்டத்தி லுய்யலு மாமே.
3
374
மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து
    மேல்மி டற்றினை யுள்ளெழ வாங்கி,
காலும் கையும் விதிர்விதிர்த் தேறிக்
    கண்ணு றக்கம தாவதன் முன்னம்,
மூல மாகிய ஒற்றை யெழுத்தை
    மூன்று மாத்திரை யுள்ளெழ வாங்கி,
வேலை வண்ணனை மேவுதி ராகில்
    விண்ண கத்தினில் மேவலு மாமே.
4
375
மடிவ ழிவந்து நீர்புலன் சோர
    வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே,
கடைவ ழிவராக் கண்ட மடைப்பக்
    கண்ணு றக்கம தாவதன் முன்னம்,
தொடைவ ழிஉம்மை நாய்கள் கவரா
    சூலத் தாலும்மைப் பாய்வதுஞ் செய்யார்,
இடைவ ழியில்நீர் கூறையு மிழவீர்
    இருடீ கேவனென் றேத்தவல் லீரேல்.
5
376
அங்கம் விட்டவை யைந்து மகற்றி
    ஆவி மூக்கினில் சோதித்த பின்னை,
சங்கம் விட்டவர் கையை மறித்துப்
    பைய வேதலை சாய்ப்பதன் முன்னம்,
வங்கம் விட்டுல வும்கடல் பள்ளி
    மாய னைமது சூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து, ஆவதோர் கருமம்
    சாதிப் பார்க்கென்றுஞ் சாதிக்க லாமே.
6
377
தென்ன வன்தமர் செப்ப மிலாதார்
    சேவ தக்குவார் போலப் புகுந்து,
பின்னும் வன்கயிற் றால்பிணித் தெற்றிப்
    பின்முன் னாக இழுப்பதன் முன்னம்,
இன்ன வன்இனை யானென்று சொல்லி
    எண்ணி யுள்ளத் திருளற நோக்கி,
மன்ன வன்மது சூதன னென்பார்
    வான கத்துமன் றாடிகள் தாமே.
7
378
கூடிக் கூடிஉற் றார்க ளிருந்து
    குற்றம் நிற்கநற் றங்கள் பறைந்து,
பாடிப் பாடியோர் பாடையி லிட்டு
    நரிப்ப டைக்கொரு பாகுடம் போலே,
கோடி மூடி யெடுப்பதன் முன்னம்
    கௌத்து வமுடைக் கோவிந்த னோடு,
கூடி யாடிய வுள்ளத்த ரானால்
    குறிப்பி டங்கடந் துய்யலு மாமே.
8
379
வாயொ ருபக்கம் வாங்கி வலிப்ப
    வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற
தாயொ ருபக்கம் தந்தையொரு பக்கம்
    தார முமொரு பக்க மலற்ற,
தீயொ ருபக்கஞ் சேர்வதன் முன்னம்
    செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற
மாய்,ஒ ருபக்கம் நிற்கவல் லாருக்
    கரவ தண்டத்தி லுய்யலு மாமே.
9
380
செத்துப் போவதோர் போது நினைந்து
    செய்யும் செய்கைகள் தேவபி ரான்மேல்,
பத்த ராயிறந் தார்பெறும் பேற்றைப்
    பாழித் தோள்விட்டு சித்தன்புத் தூர்க்கோன்,
சித்தம் நன்கொருங் கித்திரு மாலைச்
    செய்த மாலை யிவைபத்தும் வல்லார்,
சித்தம் நன்கொருங் கித்திரு மால்மேல்
    சென்ற சிந்தை பெறுவர் தாமே.#
10

6. காசும் கறையுடை
மக்களுக்கு பகவானுடைய திருநாமங்களை இட்டழைக்குமாறு அறிவுரை கூறல்
கலிநிலைத்துறை
381
காசும் கறையுடைக் கூறைக்கு மங்கோர் கற்றைக்கும்
ஆசையி னால்,அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்,
கேவசன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ,
நாயகன் நாரணன் தம்மன் னைநர கம்புகாள்.#
1
382
அங்கொரு கூறை யரைக்கு டுப்பத னாசையால்,
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்,
செங்க ணொடுமால் சிரீதரா வென்ற ழைத்தக்கால்,
நங்கைகாள்* நாரணன் தம்மன் னைநர காம்புகாள்.
2
383
உச்சியி லெண்ணையும் சுட்டியும் வளையு முகந்து,
எச்சம் பொலிந்தீர்கா ளென்செய் வான்பிறர் பேரிட்டீர்
பிச்சைபுக் காகிலு மெம்பி ரான்திரு நாமமே
நச்சுமின், நாரணன் தம்மன் னைநர காம்புகாள்.
3
384
மானிட சாதியில் தோன்றிற்றோர் மானிட சாதியை,
மானிட சாதியின் பேரிட் டால்மறு மைக்கில்லை
வானுடை மாதவா கோவிந் தாவென் றழைத்தக்கால்,
நானுடை நாரணன் தம்மன் னைநர காம்புகாள்.
4
385
மலமுடை யூத்தையில் தோன்றிற் றோர்மல வூத்தையை,
மலமுடை யூத்தையின் பேரிட் டால்மறு மைக்கில்லை,
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா வென்ற ழைத்தக்கால்,
நலமுடை நாரணன் தம்மன் னைநர காம்புகாள்.
5
386
நாடு நகரு மறிய மானிடப் பேரிட்டு,
கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே,
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோ தராவென்று
நாடுமின், நாரணன் தம்மன் னைநர காம்புகாள்.
6
387
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு, அங்கு
எண்ணமொன் றின்றி யிருக்கு மேழை மனிசர்காள்,
கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின், நாரணன் தம்மன் னைநர காம்புகாள்.
7
388
நம்பி பிம்பியென்று நாட்டு மானிடப் பேரிட்டால்,
நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளி லழுங்கிப்போம்,
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட் டழைத்தக்கால்,
நம்பிகாள்* நாரணன் தம்மன் னைநர காம்புகாள்.
8
389
ஊத்தைக் குழியி லமுதம் பாய்வது போல்,உங்கள்
மூத்திரப் பிள்ளையை என்முகில் வண்ணன் பேரிட்டு,
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ,
நாத்தகு நாரணன் தம்மன் னைநர காம்புகாள்.
9
390
சீரணி மால்திரு நாம மேயிடத் தேற்றிய,
வீரணி தொல்புகழ் விட்டு சித்தன் விரித்த,
ஓரணி யொண்டமி ழொன்பதோ டொன்றும் வல்லவர்,
பேரணி வைகுந்தத் தென்றும் பேணி யிருப்பரே.#
10

7. தங்கையை மூக்கும்
தேவப்ரயாகை என்று வழங்கப்படும் கண்டமென்னும் கடிநகரின் பெருமை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
391
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
    தடிந்தவெம் தாச ரதிபோய்,
எங்கும் தன்புக ழாவிருந் தரசாண்ட
    எம்புரு டோத்தம னிருக்கை,
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே
    கடுவினை களைந்திடு கிற்கும்,
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
    கண்டமென் னும்கடி நகரே.#
1
392
சலம்பொதி யுடம்பில் தழலுமிழ் பேழ்வாய்ச்
    சந்திரன் வெங்கதி ரஞ்ச,
மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின்
    மால்புரு டோத்தமன் வாழ்வு,
நலந்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
    நாரணன் பாதத்து ழாயும்,
கலந்திழி புனலால் புகர்படு கங்கைக்
    கண்டமென் னும்கடி நகரே.
2
393
அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி
    அழலுமி ழாழிகொண் டெறிந்துஅங்-
கெதிர்முக வசுரர் தலைகளை யிடறும்
    எம்புரு டோத்தம னிருக்கை,
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில்
    சங்கரன் சடையினில் தங்கி,
கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக்
    கண்டமென் னும்கடி நகரே.
3
394
இமையவ ரிறுமாந் திருந்தர சாள
    ஏற்றுவந் தெதிர்பொரு சேனை,
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்
    நம்புரு டோத்தமன் நகர்தான்,
இமவந்தந் தொடங்கி யிருங்கட லளவும்
    இருகரை யுலகிரைத் தாட,
(*)கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்     கண்டமென் னும்கடி நகரே.

(*) அமைவுடை, சமைவுடை என்றும் பாடங்கள்.
4
395
உழுவதோர் படையு முலக்கையும் வில்லும்
    ஒண்சுட ராழியும் சங்கும்,
மழுவொடு வாளும் படைக்கல முடைய
    மால்புரு டோத்தமன் வாழ்வு,
எழுமையுங் கூடி யீண்டிய பாவம்
    இறைப்பொழு தளவினி லெல்லாம்,
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்
    கண்டமென் னும்கடி நகரே.
5
396
தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம்
    சலசல பொழிந்திடக் கண்டு,
மலைப்பெருங் குடையால் (*)மறைத்தவன் மதுரை
    மால்புரு டோத்தமன் வாழ்வு,
அலைப்புடைத் திரைவா யருந்தவ முனிவர்
    அவபிர தம்குடைந் தாட,
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்
    கண்டமென் னும்கடி நகரே.

(*) மறுத்தவன் என்றும் கூறுவர்.
6
397
விற்பிடித் திறுத்து வேழத்தை முறுக்கி
    மேலிருந்த வன்தலை சாடி,
மற்பொரு தெழப்பாய்ந் தரையனை யுதைத்த
    மால்புரு டோத்தமன் வாழ்வு,
அற்புத முடைஐ ராவத மதமும்
    அவரிளம் படியரொண் சாந்தும்,
கற்பக மலரும் கலந்திழி கங்கைக்
    கண்டமென் னும்கடி நகரே.
7
398
திரைபொரு கடல்சூழ் திண்மதில் துவரை
    வேந்துதன் மைத்துனன் மார்க்காய்,
அரசினை யவிய வரசினை யருளும்
    அரிபுரு டோத்தம னமர்வு,
நிரைநிரை யாக நெடியன யூபம்
    நிரந்தர மொழுக்குவிட்டு, இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கைக்
    கண்டமென் னும்கடி நகரே.
8
399
வடதிசை மதுரை சாளக்கி ராமம்
    வைகுந்தம் துவரை அயோத்தி,
இடமுடை வதரி யிடவகை யுடைய
    எம்புரு டோத்தம னிருக்கை,
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத்
    தலைப்பற்றிக் கரைமரஞ் சாடி,
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
    கண்டமென் னும்கடி நகரே.#
9
400
மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால்
    மூன்றெழுத் தாக்கி,மூன் றெழுத்தை
ஏன்றுகொண் டிருப்பார்க் கிரக்கநன் குடைய
    எம்புரு டோத்தம னிருக்கை,
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி
    மூன்றினில் மூன்றுரு வானான்,
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்
    கண்டமென் னும்கடி நகரே.#
10
401
பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்
    துறைபுரு டோத்தம னடிமேல்,
வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன்
    விட்டுசித் தன்விருப் புற்று,
தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை
    தங்கிய நாவுடை யார்க்கு,
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே
    குளித்திருந் தகணக் காமே.#
11

8. மாதவத்தோன்
திருவரங்கம் பெரிய கோயிலின் மகிமை
தரவு கொச்சகக் கலிப்பா
402
மாதவத்தோன் புத்திரன்போய்
    மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா
    உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய்மறையோர்
    குறைபடியத் துளும்பியெங்கும்
போதில்வைத்த தேன்சொரியும்
    புனலரங்க மென்பதுவே.#
1
403
பிறப்பகத்தே மாண்டொழிந்த
    பிள்ளைகளை நால்வரையும்,
இறைப்பொழுதில்ட கொணர்ந்துகொடுத்
    தொருப்படுத்டத வுறைப்பனூர்,
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்
    வருவிருந்தை யளித்திருப்பார்,
சிறப்புடைய மறையவர்வாழ்
    திருவரங்க மென்பதுவே.
2
404
மருமகன்றன் சந்ததியை
    உயிர்மீட்டு மைத்துனன்மார்,
உருமகத்தே வீழாமே
    குருமுகமாய்க் காத்தானூர்,
திருமுகமாய்ச் செங்கமலம்
    திருநிறமாய்க் கருங்குவளை,
பொருமுகமாய் நின்றலரும்
    புனலரங்க மென்பதுவே.
3
405
கூன்தொழுத்தை சிதகுரைப்பக்
    கொடியவள்வாய்க் கடியசொற்கேட்டு,
ஈன்றெடுத்த தாயரையும்
    இராச்சியமு மாங்கொழிய,
கான்தொடுத்த நெறிபோகிக்
    கண்டகரைக் களைந்தானூர்,
தேன்தொடுத்த மலர்ச்சோலைத்
    திருவரங்க மென்பதுவே.
4
406
பெருவரங்க ளவைபற்றிப்
    பிழக்குடைய இராவணனை,
உருவரங்கப் பொருதழித்திவ்
    வுலகினைக்கண் பெறுத்தானூர்,
குரவரும்பக் கோங்கலரக்
    குயில்கூவும் குளிர்பொழில்சூழ்,
திருவரங்க மென்பதுவே
    என்திருமால் சேர்விடமே.
5
407
கீழுலகி லசுரர்களைக்
    கிழங்கிருந்து கிளராமே,
ஆழிவிடுத் தவருடைய
    கருவழித்த அழிப்பனூர்,
தாழைமட லூடுரிஞ்சித்
    தவளவண்ணப் பொடியணிந்து,
யாழினிசை வண்டினங்கள்
    ஆளம்வைக்கு மரங்கமே.
6
408
கொழுப்புடைய செழுங்குருதி
    கொழித்திழிந்து குமிழ்த்தெறிய,
பிழக்குடைய அசுரர்களைப்
    பிணம்படுத்த பெருமானூர்,
தழுப்பரிய சந்தனங்கள்
    தடைவரைவா யீர்த்துக்கொண்டு,
தெழிப்புடைய காவிரிவந்
    தடிதொழும்சீ ரரங்கமே.
7
409
வல்லெயிற்றுக் கேழலுமாய்
    வாளெயிற்றுச் சீயமுமாய்,
எல்லையில்லாத் தரணியையும்
    அவுணனையும் இடந்தானூர்,
எல்லியம்போ திருஞ்சிறைவண்
    டெம்பெருமான் குணம்பாடி,
மல்லிகைவெண் சங்கூதும்
    மதிலரங்க மென்பதுவே.
8
410
குன்றாடு கொழுமுகில்போல்
    குவளைகள்போல் குரைகடல்போல்,
நின்றாடு கணமயில்போல்
    நிறமுடைய நெடுமாலூர்,
குன்றூடு பொழில்நுழைந்து
    கொடியிடையார் முலையணவி,
மன்றூடு தென்றலுலாம்
    மதிலரங்க மென்பதுவே.
9
411
பருவரங்க ளவைபற்றிப்
    படையாலித் தெழுந்தானை,
செருவரங்கப் பொருதழித்த
    திருவாளன் திருப்பதிமேல்,
திருவரங்கத் தமிழ்மாலை
    விட்டுசித்தன் விரித்தனகொண்டு,
இருவரங்க மெரித்தானை
    ஏத்தவல்லா ரடியோமே.#
10

9. மரவடியை
திருவரங்கத் திருப்பதி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
412
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம்
    வைத்துப்போய் வானோர் வாழ,
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்
    துலகாண்ட திருமால் கோயில்
திருவடிதன் திருவுருவும் திருமங்கை
    மலர்க்கண்ணும் காட்டி நின்று,
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட
    ஓசலிக்கு மொளிய ரங்கமே.#
1
413
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா
    ளாகிலும் சிதகு ரைக்குமேல்,
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல்
    நன்றுசெய்தா ரென்பர் போலும்,
மன்னுடைய விபீடணற்காய் மதிலிலங்கைத்
    திசைநோக்கி மலர்க்கண் வைத்த,
என்னுடைய திருவரங்கற் கன்றியும்
    மற்றொருவர்க் காளா வாரே*#
2
414
கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும்
    பிலம்பனையும் கடிய மாவும்,
உருளுடைய சகடரையும் மல்லரையும்
    உடையவிட் டோசை கேட்டான்,
இருளகற்று மெறிகதிரோன் மண்டலத்தூ
    டேற்றிவைத் தேணி வாங்கி,
அருள்கொடுத்திட் டடியவரை யாட்கொள்வான்
    அமருமூ ரணிய ரங்கமே.
3
415
பதினாறா மாயிரவர் தேவிமார்
    பணிசெய்யத் துவரை யென்னும்
மதில்நா யகராகி வீற்றிருந்த
    மணவாளர் மன்னு கோயில்,
புதுநாண் மலர்க்கமல மெம்பெருமான்
    பொன்வயிற்றில் பூவே போல்வான்,
பொதுநா யகம்பாவித் திறுமாந்து
    பொன்சாய்க்கும் புனல ரங்கமே.
4
416
ஆமையாய்க் கங்கையா யாழ்கடலாய்
    அவனியா யருவ ரைகளாய்,
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்
    தக்கணையாய்த் தானு மானான்,
சேமமுடை நாரதனார் சென்றுசென்று
    துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில்,
பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன்
    புகழ்குழறும் புனல ரங்கமே.
5
417
மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்
    தவர்களையே மன்ன ராக்கி,
உத்தரைதன் சிறுவனையு முயக்கொண்ட
    உயிராள னுறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
    முனிவர்களும் பரந்த நாடும்,
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய்
    நிற்கின்ற திருவ ரங்கமே.
6
418
குறட்பிரம சாரியாய் மாவலியைக்
    குறும்பதக்கி யரசு வாங்கி,
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை
    கொடுத்துகந்த எம்மான் கோயில்,
எறிப்புடைய மணிவரைமே லிளஞாயி
    றெழுந்தாற்போ லரவ னையின்வாய்,
சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்
    விட்டெறிக்கும் திருவ ரங்கமே.
7
419
உரம்பற்றி யிரணியனை யுகிர்நுதியால்
    ஒள்ளியமார் புறைக்க வூன்றி,
சிரம்பற்றி முடியிடியக் கண்பிதுங்க
    வாயலறத் தெழித்தான் கோயில்,
உரம்பெற்ற மலர்க்கமல முலகளந்த
    சேவடிபோ லுயர்ந்து காட்ட,
வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்
    தலைவணக்கும் தண்ண ரங்கமே.
8
420
தேவுடைய மீனமா யாமையாய்
    ஏனமா யரியாய்க் குறளாய்,
மூவுருவி லிராமனாய்க் கண்ணனாய்க்
    கற்றியாய் முடிப்பான் கோயில்,
சேவலொடு பெடையன்னம் செங்கமல
    மலரேறி யூச லாடி,
பூவணைமேல் துதைந்தெழுசெம் பொடியாடி
    விளையாடும் புனல ரங்கமே.
9
421
(*)செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்
    செருச்செய்யும் நாந்தக மென்னும்
ஒருவாளன், மறையாள னோடாத
    படையாளன் விழுக்கை யாளன்,
இரவாளன் பகலாள னெனையாளன்,
    ஏழுலகப் பெரும்புர வாளன்,
திருவாள னினிதாகத் திருக்கண்கள்
    வளர்கின்ற திருவ ரங்கமே.

(*) செருவாளன் என்றும் பாடம்.
10
422
கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப்
    படையுடையான் கருதும் கோயில்,
தென்னாடும் வடநாடும் தொழநின்ற
    திருவரங்கத் திருப்ப தியின்மேல்,
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்
    விரித்ததமி ழுரைக்க வல்லார்,
எஞ்ஞான்று மெம்பெருமா னிணையடிக்கீழ்
    இணைபிரியா திருப்பர் தாமே.#
11

10. துப்புடையாரை
அரவணைப்பள்ளிகொள் அரங்கனைப் போற்றல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
423
துப்புடை யாரை யடைவ தெல்லாம்
    சோர்விடத் துத்துணை யாவ ரென்றே,
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன்
    ஆனைக்கு நீயருள் செய்த மையால்,
எய்ப்பென்னை வந்து நலியும் போதங்
    கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே*#
1
424
சாமிடத் தென்னைக் குறிக்கொள் கண்டாய்
    சங்கொடு சக்கர மேந்தி னானே,
நாமடித் தென்னை யநேக தண்டஞ்
    செய்வதா நிற்பர் நமன்ற மர்கள்,
போமிடத் துன்திறத் தெத்த னையும்
    புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை,
ஆமிடத் தேயுன்னைச் சொல்லி வைத்தேன்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
2
425
எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
    எற்றி நமன்றமர் பற்றும் போது,
நில்லுமி னென்னு முபாய மில்லை
    நேமியும் சங்கமு மேந்தி னானே,
சொல்லலாம் போதேயுன் நாம மெல்லாம்
    சொல்லினே னென்னைக் குறிக்கொண் டென்றும்,
அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே.*
3
426
ஒற்றை விடைய னும்நான் முகனும்
    உன்னை யறியாப் பெருமை யோனே,
முற்ற வுலகெல்லாம் நீயே யாகி
    மூன்றெழுத் தாய முதல்வ னேயோ,
அற்றது வாணா ளவிற்கென் றெண்ணி
    அஞ்ச நமன்றமர் பற்ற லுற்ற,
அற்றைக்க நீயென்னைக் காக்க வேண்டும்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே.*
4
427
பையர வினணைப் பாற்க டலுள்
    பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி,
உய்ய வுலகு படைக்க வேண்டி
    உந்தியில் தோற்றி னாய்நான் முகனை,
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக்
    கால னையுமுட னேபடைத் தாய்,
ஐய* இனியென்னைக் காக்க வேண்டும்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே.*
5
428
தண்ணென வில்லை நமன்ற மர்கள்
    சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்,
மண்ணொடு நீரு மெரியும் காலும்
    மற்றுமா காசமு மாகி நின்றாய்,
எண்ணலாம் போதேயுன் நாம மெல்லாம்
    எண்ணினே னென்னைக் குறிக்கொண் டென்றும்,
அண்ணலே* நீயென்னைக் காக்க வேண்டும்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே.*
6
429
செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற
    தேவர்கள் நாயக னே*எம் மானே,
எஞ்ச லிலென்னு டையின் னமுதே
    ஏழுல குமுடை யாய்*என் னப்பா,
வஞ்ச வுருவின் நமன்ற மர்கள்
    வலிந்து நலிந்தென்னைப் பற்றும் போது,
அஞ்சலை யென்றென்னைக் காக்க வேண்டும்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே.*
7
430
நானேது முன்மாய மொன்ற றியேன்
    நமன்றமர் பற்றி நலிந்திட்டு, இந்த
ஊனே புகேயென்று மோதும் போதங்
    கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்,
வானேய் வானவர் தங்க ளீசா*
    மதுரைப் பிறந்த மாமாய னே,என்
ஆனாய்நீ யென்னைக் காக்க வேண்டும்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே.*
8
431
குன்றெடுத் தாநிரை காத்த ஆயா*
    கோநிரை மேய்த்தவ னே*(*)எம் மானே,
அன்று முதலின் றறுதி யா
    ஆதியஞ் சோதி மறந்த றியேன்,
நன்றும் கொடிய நமன்ற மர்கள்
    நலிந்து வலிந்தென்னைப் பற்றும் போது,
அன்றங்கு நீயென்னைக் காக்க வேண்டும்
    அரங்கத் தரவணைப் பள்ளி யானே.*

(*) அம்மானே என்பார் சிலர்.
9
432
மாய வனைமது சூதனன் றன்னை
    மாதவ னைமறை யோர்க ளேத்தும்,
ஆயர்க ளேற்றினை யச்சுதன் றன்னை
    அரங்கத் தரவணைப் பள்ளி யானை,
வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன்
    விட்டுசித் தன்சொன்ன மாலை பத்தும்,
தூய மனத்தன ராகி வல்லார்
    தூமணி வண்ணனுக் காளர் தாமே.#
10
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஐந்தாம் பத்து
1. வாக்குத்தூய்மை
நைச்சியானுசந்தானம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
433
வாக்குத் தூய்மை யிலாமையி னாலே
    மாத வா*உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்,
நாக்கு நின்னையல் லாலறி யாது
    நான தஞ்சுவ னென்வச மன்று,
மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று
    முனிவா யேலுமென் நாவினுக் காற்றேன்,
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
    கார ணாகரு ளக்கொடியானே*#
1
434
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்
    சங்கு சக்கர மேந்துகை யானே,
பிழைப்ப ராகிலும் தம்மடி யார்சொல்
    பொறுப்ப தும்பெரி யோர்கட னன்றே,
விழிக்குங் கண்ணிலேன் நின்கண்மற் றல்லால்
    வேறொ ருவரோ டென்மனம் பற்றாது,
உழைக்கோர் புள்ளி மிகையன்று கண்டாய்
    ஊழி யேழுல குண்டுமிழ்ந் தானே*
2
435
நன்மை தீமைக ளொன்று மறியேன்
    நார ணா*என்னு மித்தனை யல்லால்,
புன்மை யாலுன்னைப் புள்ளுவர் பேசிப்
    புகழ்வா னன்றுகண் டாய்திரு மாலே,
உன்னு மாறுன்னை யொன்று மறியேன்
    ஓவா தே'நமோ நாரணா*' என்பன்,
வன்மை யாவதுன் கோயிலில் வாழும்
    வைட்ட ணவனென்னும் வண்மைகண் டாயே.
3
436
நெடுமை யாலுல கேழு மளந்தாய்*
    நின்ம லா*நெடி யாய்,அடி யேனைக்
குடிமை கொள்வதற் கையுற் வேண்டா
    கூறை சோறிவை வேண்டுவ தில்லை,
அடிமை யென்னுமக் கோயின்மை யாலே
    அங்கங் கேயவை போதருங் கண்டாய்,
கொடுமைக் கஞ்சனைக் கொன்றுநின் தாதை
    கோத்த வன்தளை கோள்விடுத் தானே*
4
437
தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை
    துடவை யும்கிண றும்இவை யெல்லாம்,
வாட்ட மின்றியுன் பொன்னடிக் கீழே
    வளைப்ப கம்வகுத் துக்கொண் டிருந்தேன்,
நாட்டு மானிடத் தோடெனெக் கரிது
    நச்சு வார்பலர் கேழலொன் றாகி,
கோட்டு மண்கொண்ட கொள்கையி னானே*
    குஞ்ச ரம்வீழக் கொம்பொசித் தானே*
5
438
கண்ணா* நான்முக னைப்படைத் தானே*
    கார ணா*கரி யாய்*அடி யேன்நான்,
உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை
    ஓவா தே'நமோ நாரணா*' என்று,
எண்ணா நாளும் இருக்கெசுக் சாம
    வேத நாண்மலர் கொண்டுன பாதம்
நண்ணா நாள், அவை தத்துறு மாகில்
    அன்றெ னக்கவை பட்டினி நாளே.
6
439
வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை
    மெத்தை யாக விரித்து,அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
    காண லாங்கொல் (*)என் றாசையி னாலே,
உள்ளஞ் சோர வுகந்தெதிர் விம்மி
    உரோம கூபங்க ளாய்,கண்ண நீர்கள்
துள்ளம் கோரத் துயிலணை கொள்ளேன்
    சொல்லாய் யானுன்னைத் தத்துறு மாறே.

(*) என்னாசையினாலே என்றும் பாடம்.
7
440
வண்ண மால்வரை யேகுடை யாக
    மாரி காத்தவ னே,மது சூதா,
கண்ண னே*கரி கோள்விடுத் தானே*
    கார ணா*களி றட்டபி ரானே,
எண்ணு வாரிட ரைக்களை வானே*
    ஏத்த ரும்பெருங் கீர்த்தியி னானே,
நண்ணி நானுன்னை நாடொறு மேத்தும்
    நன்மை யேயருள் செய்யெம்பி ரானே*
8
441
நம்ப னே*நவின் றேத்தவல் லார்கள்
    நாத னேநர சிங்கம தானாய்,
உம்பர் கோனுல கேழு மளந்தாய்*
    ஊழி யாயினாய்* ஆழிமுன் னேந்தி,
கம்ப மாகரி கோள்விடுத் தானே*
    கார ணா*கட லைக்கடைந் தானே,
எம்பி ரான்*என்னை யாளுடைத் தேனே*
    ஏழை யேனிட ரைக்களை யாயே.
9
442
காமர் தாதை கருதலர் சிங்கம்
    காண வினிய கருங்குழற் குட்டன்,
வாம னன்னென் மரகத வண்ணன்
    மாத வன்மது சூதுனன் றன்னை,
சேம நன்கம ரும்புது வையர்கோன்
    விட்டு சித்தன் (*)வியன்தமிழ் பத்தும்,
நாம மென்று நவின்றுரைப் பார்கள்
    நண்ணு வாரொல்லை நாரண னுலகே.#

(*) வியத்தமிழ் என்றும் பாடம்.
10

2. நெய்க்குடத்தை
அரவணையாதியான் காப்பாற் பிண்போக்கல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
443
நெய்க்குடத் தைப்பற்றி யேறும்
    எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்*
    காலம் பெறவுய்யப் போமின்,
மெய்க்கொண்டு வந்து புகுந்து
    வேதப் பிரானார் கிடந்தார்,
பைக்கொண்ட பாம்பணை யோடும்
    பண்டன்று பட்டினங் காப்பே.#
1
444
சித்திர குத்த னெழுத்தால்
    தென்புலக் கோன்பொறி யொற்றி,
வைத்த விலச்சினை மாற்றித்
    தூதுவ ரோடி யொளித்தார்,
முத்துத் திரைக்கடற் சேர்ப்பன்
    மூதறி வாளர் முதல்வன்,
பத்தர்க் கமுத னடியேன்
    பண்டன்று பட்டினங் காப்பே.
2
445
வயிற்றில் தொழுவைப் பிரித்து
    வன்புலச் சேவை யதக்கி,
கயிற்றும்அக் காணி கழித்துக்
    (*)காலிடைப் பாசங் கழற்றி,
எயிற்றிடை மண்கொண்ட வெந்தை
    இராப்பக லோதுவித்து, என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்
    பண்டன்று பட்டினங் காப்பே.

(*) காலிடப் பாசம் என்றும் காலடைப் பாசம் என்றும் பாடங்கள்.
3
446
மங்கிய வல்வினை நோய்காள்*
    உமக்குமோர் வல்வினை கண்டீர்,
இங்குப் புகேன்மின் புகேன்மின்
    எளிதன்று கண்டீர் புகேன்மின்,
சிங்கப் பிரானவ னெம்மான்
    சேருந் திருக்கோயில் கண்டீர்,
பங்கப் படாதுய்யப் போமின்
    பண்டன்று பட்டினங் காப்பே.
4
447
மாணிக் குறளுரு வாய
    மாயனை யென்மனத் துள்ளே,
பேணிக் கொணர்ந்து புகுத
    வைத்துக்கொண் டேன்பிறி தின்றி,
மாணிக்கப் பண்டாரங் கண்டீர்
    வலிவன் குறும்பர்க ளுள்ளீர்,
பாணிக்க வேண்டா நடமின்
    பண்டன்று பட்டினங் காப்பே.
5
448
உற்ற வுறுபிணி நோய்காள்*
    உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின்,
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
    பேணும் திருக்கோயில் கண்டீர்,
அற்ற முரைக்கின்றே னின்னம்
    ஆழ்வினை காள்,உமக் கிங்கோர்
பற்றில்லை கண்டீர் நடமின்
    பண்டன்று பட்டினங் காப்பே.
6
449
கொங்கைச் சிறுவரை யென்னும்
    பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி,
அங்கோர் முழையினில் புக்கிட்
    டழுந்திக் கிடந்துழல் வேனை,
வங்கக் கடல்வண்ண னம்மான்
    வல்வினை யாயின மாற்றி,
பங்கப் படாவண்ணஞ் செய்தான்
    பண்டன்று பட்டினங் காப்பே.
7
450
ஏதங்க ளாயின வெல்லாம்
    இறங்க விடுவித்து,என் னுள்ளே
பீதக வாடைப் பிரானார்
    பிரம குருவாகி வந்து,
போதில் கமலவன் னெஞ்சம்
    புகுந்துமென் சென்னித் திடரில்,
பாத விலச்சினை வைத்தார்
    பண்டன்று பட்டினங் காப்பே.
8
451
உறகல் உறகல் உறகல்
    ஒண்சுட ராழியே* சங்கே,
அறவெறி நாந்தக வாளே*
    அழகிய சார்ங்கமே* தண்டே,
இறவு படாம லிருந்த
    எண்ம ருலோகபா லீர்காள்,
பறவை யரையா* உறகல்
    பள்ளி யறைகுறிக் கொண்மின்.#
9
452
அரவத் தமளியி னோடும்
    அழகிய பாற்கட லோடும்,
அரவிந்தப் பாவையுந் தானும்
    அகம்படி வந்து புகுந்த,
பரவைத் திரைபல மோதப்
    பள்ளிகொள் கின்ற பிரானை,
பரவுகின் றான்விட்டு சித்தன்
    பட்டினங் காவற்பொ ருட்டே.#
10

3. துக்கச் சுழலையை
திருமாலிருஞ்சோலை எம்பெருமானை மீக்கூறல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
453
துக்கச் சுழலையைச் சூழ்ந்து
    கிடந்த வலையை யறப்பறித்து,
புக்கினிற் புக்குன்னைக் கண்டுகொண்
    டேனினிப் போத விடுவதுண்டே,
மக்க ளறுவரைக் கல்லிடை
    மோத இழந்தவள் தன்வயிற்றில்,
சிக்கென வந்து பிறந்துநின்
    றாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்*#
1
454
வளைத்துவைத் தேனினிப் போகலொட்
    டேனுன்ற னிந்திர ஞாலங்களால்,
ஒளித்திடில் நின்திரு வாணைகண்
    டாய்நீ யொருவர்க்கும் மெய்யனல்லை,
அளித்தெங்கும் நாடு நகரமும்
    தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று,
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்த
    முடைத்திரு மாலிருஞ் சோலையெந்தாய்*
2
455
உனக்குப் பணிசெய் திருக்கும்
    தவமுடை யேனினிப் போயொருவன்-
றனக்குப் பணிந்து, கடைத்தலை
    நிற்கைநின் சாயை யழவுகண்டாய்,
புனத்தினைக் கிள்ளிப் புதுவவி
    காட்டியுன் பொன்னடி வாழ்கவென்று,
இனக்கு றவர்பு தியதுண்ணும்
    எழில்மாலிருஞ் சோலை யெந்தாய்#
3
456
காதம் பலவும் திரிந்துழன்
    றேற்கங்கோர் திழலில்லை நீருமில்லை,உன்
பாத நிழலல்லால் மற்றோர்
    உயிர்ப்பிடம் நானெங்கும் காண்கின்றிலேன்,
தூதுசென் றாய்குரு பாண்டவர்க்-
    காயங்கோர் பொய்ச்சுற்றம் பேசிச்சென்று,
பேதஞ்செய் தெங்கும் பிணம்படுத்-
    தாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்*
4
457
காலு மெழாகண்ண நீரும்நில்-
    லாஉடல் சோர்ந்து நடுங்கி,குரல்
மேலு மொமயிர்க் கூச்சு
    மறாஎன தோள்களும் வீழ்வொழியா,
மாலுக ளாநிற்கு மென்மன
    னேஉன்னை வாழத் தலைப்பெய்திட்டேன்,
சேலுக ளாநிற்கும் நீள்சுனை
    சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்*
5
458
எருத்துக் கொடியுடை யானும்
    பிரமனு மிந்திர னும்,மற்றும்
ஒருத்தரு மிப்பிற வியென்னும்
    நோய்க்கு மருந்தறி வாருமில்லை,
மருத்துவ னாய்நின்ற மாமணி
    வண்ணா* மறுபிற விதவிரத்
திருத்தி,உன் கோயில் கடைப்புகப்
    பெய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்*
6
459
அக்கரை யென்னு மனத்தக்
    கடலு ளழுந்தியுன் பேரருளால்,
இக்கரை யேறி இளைத்திருந்
    தேனைஅஞ் சேலென்று கைகவியாய்,
சக்கர மும்தடக் கைகளும்
    கண்களும் பீதக வாடையொடும்,
செக்கர் நிறத்துச் சிவப்புடை-
    யாய்*திரு மாலிருஞ் சோலையெந்தாய்*
7
460
எத்தனை காலமு மெத்தனை
    யூழியு மின்றொடு நாளையென்றே,
இத்தனை காலமும் போய்க்கிறிப்
    பட்டே னினியுன்னைப் போகலொட்டேன்,
மைத்துனன் மார்களை வாழ்வித்து
    மாற்றலர் நூற்றுவ ரைக்கெடுத்தாய்,
சித்தம்நின் பால தறிதியன்
    றேதிரு மாலிருஞ் சோலையெந்தாய்*
8
461
அன்று வயிற்றிற் கிடந்திருந்த
    தேயடி மைசெய்ய லுற்றிருப்பன்,
இன்றுவந் திங்குன்னைக் கண்டுகொண்-
    டேனினிப் போக விடுவதுண்டே,
சென்றங்கு வாணனை ஆயிரந்
    தோளும் திருச்சக் கரமதனால்,
தென்றித் திசைதிசை வீழச்செற்-
    றாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்*
9
462
சென்றுல கம்குடைந்த தாடுஞ்
    சுனைத்திரு மாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்,அடி மேலடி
    மைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய்,
பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்-
    றும்புது வைக்கோன் விட்டுசித்தன்,
ஒன்றினோ டொன்பதும் பாடவல்
    லாருல கமளந் தான்தமரே.#
10

4. சென்னியோங்கு
(இந்தத் திருமொழி நித்தியானுஸந்தானத்திலுள்ளது)
இதயத்துள் நிறைந்து எம்பிரான் மலர்ந்தமை
கலி விருத்தம்
463
சென்னியோங்கு தண்திருவேங்
    கடமுடை யாய்,உலகு
தன்னைவாழ நின்றநம்பீ
    தாமோதரா சதிரா,
என்னையுமென் னுடைமையையுமுன்
    சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு,
நின்னருளே புரிந்திருந்தேன்
    இனியென் திருக்குறிப்பே?#
1
464
பறவையேறு பரமபுருடா*
    நீயென்னைக் கைக்கொண்டபின்,
பிறவியென்னும் கடலும்வற்றிப்
    பெரும்பத மாகின்றதால்,
இறவுசெய்யும் பாவக்காடு
    தீக்கொளிஇ வேகின்றதால்,
அறிவையென்னு மமுதஆறு
    தலைப்பற்றி வாய்க்கொண்டதே.
2
465
எம்மனா* என் குலதெய்வமே*
    என்னுடைய நாயகனே,
நின்னுள்ளேனாய்ப் பெற்றநன்மை
    இவ்வுலகினி லார்பெறுவார்,
நம்மன்போலே வீழ்த்தமுக்கும்
    நாட்டிலுள்ள பாலமெல்லாம்,
சும்மெனாதே கைவிட்டோடித்
    தூறுகள் பாய்ந்தனவே.
3
466
கடல்கடைந் தமுதங்கொண்டு
    கலசத்தை நிறைத்தாற்போல்,
உடலுருகி வாய்திறந்து
    மடுத்துன்னை நிறைத்துக்கொண்டேன்,
கொடுமைசெய்யும் கூற்றமுமென்
    கோலாடி குறுகப்பெறா
தடவரைத்தோள் சக்கரபாணீ*
    சார்ங்கவிற் சேவகனே*
4
467
பொன்னைக்கொண் டுரைகல்மீதே
    நிறமெழ வுரைத்தாற்போல்,
உன்னைக்கொண்டென் நாவகம்பால்
    மாற்றின்றி யுரைத்துத்கொண்டேன்,
உன்னைக்கொண் டென்னுள்வைத்தேன்
    என்னையு முன்னிலிட்டேன்,
என்னப்பா*என் இருடீகேசா*
    என்னுயிர் காவலனே*
5
468
உன்னுடைய விக்கிரமம்
    ஒன்றொழி யாமலெல்லாம்,
என்னுடைய நெஞ்சகம்பால்
    சுவர்வழி யெழுதிக்கொண்டேன்,
மன்னடங்க மழுவலங்கைக்
    கொண்ட இராமநம்பீ,
என்னிடைவந் தெம்பெருமான்
    இனியெங்குப் போகின்றதே*
6
469
பருப்பதத்துக் கயல்பொறித்த
    பாண்டியர் குலபதிபோல்,
திருப்பொலிந்த சேவடியென்
    சென்னியின் மேல்பொறித்தாய்,
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய்
    என்றென்றுன் வாசகமே,
உருப்பொலிந்த நாவினேனை
    உனக்குரித் தாக்கினையே.
7
470
அனந்தன்பாலும் கருடன்பாலும்
    ஐதுநொய்தாக வைத்து,என்
மனந்தனுள்ளே வந்துவைகி
    வாழச்செய்தா யெம்பிரான்,
நினைந்தென்னுள் ளேநின்று
    நெக்குக்கண்கள் அசும்பொழுக,
நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்
    நேமி நெடியவனே*
8
471
பனிக்கடலில் பள்ளிகோளைப்
    பழகவிட்டு, ஓடிவந்தென்
மனக்கடலில் வாழவல்ல
    மாயமணாள நம்பீ,
தனிக்கடலே* தனிச்சுடரே*
    தனியுலகே என்றென்று,
உனக்கிடமா யிருக்கவென்னை
    உனக்குரித் தாக்கினையே.#
9
472
தடவரையாய் மிளிர்ந்துமின்னும்
    தவளநெடுங் கொடிபோல்,
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே
    தோன்றுமென் சோதிநம்பீ,
வடதடமும் வைகுந்தமும்
    மதிள்துவ ராபதியும்,
இடவகைக ளிகழ்ந்திட்டென்பால்
    இடவகை கொண்டனையே.#
10
473
வேயர்தங்கள் குலத்துதித்த
    விட்டுசித் தன்மனத்தே,
கோயில்கொண்ட கோவலனைக்
    கொழுங்குளிர் முகில்வண்ணனை,
ஆயரேற்றை அமரர்கோவை
    அந்தணர்த மமுதத்தினை,
சாயைபோலப் பாடவல்லார்
    தாமு மணுக்கர்களே.#
11
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com